தேன்கனிக்கோட்டை அருகே இன்று அதிகாலை பெண் சத்துணவு ஊழியர் யானை மிதித்து பரிதாப பலி: கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே கோயில் விழாவிற்கு சென்று விட்டு இன்று அதிகாலை கிராமத்திற்கு திரும்பிய பெண் சத்துணவு ஊழியர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கெத்தள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மனைவி ராஜம்மா (45). இவர் அருகே உள்ள அரசு பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு அய்யூர் கிராமத்தில் நடந்த மாதேஸ்வரன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு, அதிகாலையில் தனியாக கெத்தள்ளி கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். கெத்தள்ளி-குடிசலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஒற்றை யானை ராஜம்மாவை தூக்கி வீசி, மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜம்மா உயிரிழந்தார்.

இதனிடையே திருவிழாவிற்கு சென்ற ராஜம்மாவை காணாமல், குடும்பத்தினர் இன்று காலை தேட தொடங்கினர். அப்போது கோயில் செல்லும் வழியில் ராஜம்மா யானை மிதித்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரகர் வெங்கடாசலம், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ராஜம்மா சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: