வால்பாறையில் பலசரக்கு கடையை காட்டு யானைகள் உடைத்து சூறை

வால்பாறை: வால்பாறை பகுதியில் கல்யாண பந்தல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு பலசரக்கு கடையை இன்று காலை காட்டு யானைகள் உடைத்து, பொருட்களை சூறையாடின. இக்கடை அருகேயுள்ள பள்ளி வாக்குச்சாவடியையும் வரும் நாட்களில் தாக்கும் அபாயம் உள்ளது.நாடாளுமன்ற தேர்தல் பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட வால்பாறை தாலுகாவில் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது 61 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதைய 2019 தேர்தலுக்கு கூடுதலாக 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 68 வாக்குச்சாவடிகள் உள்ளது. வால்பாறை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை வால்பாறை தாசில்தார் வெங்கடாசலம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் நடராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகில் உள்ளதால் வன விலங்குகள் அடிக்கடி பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு வரும் நிலை உள்ளது. குறிப்பாக ரேசன் அரிசி பயன்படுத்தும் பள்ளி சத்துணவு கூடங்களை காட்டு யானைகள் உடைத்து உணவு சாப்பிடுவது வழக்கம். மேலும், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முள்ளம்பன்றி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும் வருவது வாடிக்கை.எனவே இங்குள்ள 68 வாக்குச்சாவடிகளில் 3 வாக்குச்சாவடிகள் காட்டு யானைகளால் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை, மானாம்பள்ளி, சின்னக்கல்லார் மற்றும் சக்தி எஸ்டேட்களில் உள்ள 3 வாக்குச்சாவடிகளாகும்.

இந்த நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் வால்பாறை கல்யாணப்பந்தல் எஸ்டேட்டில் உள்ள ஒரு மளிகை கடையை உடைத்து அதிலுள்ள மளிகை பொருட்களை சூறையாடியுள்ளன. இந்த கடைக்கு அருகே பள்ளி வாக்குச்சாவடி உள்ளது. அதும் வரும் நாட்களில் யானைகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், இந்த பள்ளி வாக்குச்சாவடி இந்த ஆண்டு காட்டு யானைகளால் பாதிக்கும் 3 வாக்குச்சாவடி பட்டியலில் இல்லை. ஆனால், இந்த வாக்குச்சாவடி கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின் போது பாதிக்கப்படும் வாக்குச்சாவடி பட்டியலில் இருந்தது. இதனால், இந்த பள்ளி வாக்குச்சாவடியையும் யானைகள் தாக்கும் வாக்குச்சாவடியாக அறிவித்து, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: