மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் : மாயாவதி அறிவிப்பு

லக்னோ: ‘‘கட்சியினரின் வெற்றிக்காக  இம்முறை மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்’’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் பாஜவை வீழ்த்த பரம எதிரிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜூம் கூட்டணி சேர்ந்துள்ளன. இக்கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளமும் சேர்ந்துள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தற்போதைய அரசியல் சூழல், நாட்டின் தேவை, கட்சி, மக்கள் நலன் கருதி, இம்முறை மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என பல மணி நேர யோசனைக்குப் பின் முடிவெடுத்துள்ளேன். நான் வேட்புமனு தாக்கல் செய்தால் மட்டும் போதும், எனது வெற்றியை தொண்டர்கள் உறுதி செய்வார்கள். ஆனால், நான் போட்டியிட்டால், அந்த தொகுதியில் மட்டுமே கட்சி நிர்வாகிகள் அதிக கவனம் செலுத்துவார்கள். எனவே, கட்சியின் மற்ற வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கப்படும்.

இம்முறை ஒவ்வொரு தொகுதியின் வெற்றியும் முக்கியம். அதனால், போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். அதே நேரத்தில், நாடாளுமன்றத்துக்கு நான் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்போது காலியாகும் எந்த தொகுதியிலாவது இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆவேன். அதில் எந்த பிரச்னையும் இருக்காது. இவ்வாறு மாயாவதி கூறி உள்ளார். உ.பியில் கடந்த 2014 மக்களவை தேர்தலில் 80ல் ஒரு தொகுதியில் கூட பகுஜன் சமாஜ் வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: