திறமையை நிரூபிக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு..... வி.வி.எஸ்.லஷ்மண் உற்சாகம்

ஐதராபாத்: ஐபிஎல் டி2ல் தொடர், இளம் வீரர்கள் தங்களின் திறமையை நிரூபிப்பதற்கு அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆலோசகர் வி.வி.எஸ்.லஷ்மண் கூறியுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 12வது சீசனில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அறிமுக விழா, ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பயிற்சியாளர்கள் டாம் மூடி, முத்தையா முரளிதரன், வி.வி.எஸ்.லஷ்மண் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய வி.வி.எஸ்.லஷ்மண் கூறியதாவது: ஐபிஎல் தொடர், இளம் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி நட்சத்திரங்களாக உருவாகுவதற்கு அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனால் வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி முழு திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் காட்டும் ஊக்கமும், உற்சாகமும் அனைவரையும் வசீகரிப்பதாக உள்ளது.

ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும் வீரர்களை தேர்வு செய்ய எங்களிடம் நான்கு அல்லது ஐந்து வகை வியூகங்கள் உள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான வீரர்களை களமிறக்குவோம். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் திறமையான இந்திய வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பது கூடுதல் சாதகமாக உள்ளது. சன்ரைசர்ஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. எனவே எதிர்வரும் சீசனை மிகுந்த நம்பிக்கையுடன் சந்திக்கிறோம். ஒரு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறவில்லை. ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம். கடந்த சீசனில் பைனல் வரை முன்னேறினோம். அனைத்து வீரர்களும் முழு உடல்தகுதியுடன் தயாராக உள்ளனர். ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படும்போது உத்வேகம் தானாகவே வந்துவிடும். அது தொடர் முழுவதும் நீடிப்பதுடன், இறுதிக் கட்டம் வரை செல்ல நிச்சயம் உதவும்.

டேவிட் வார்னர் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் வலு சேர்த்துள்ளது. அவருக்கு சக வீரர்கள் வழங்கிய உற்சாக வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தருவதாக இருந்தது. ஒரு கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் வார்னரின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இளம் வீரர்கள் அவரிடம் இருந்து நிறைய அனுபவப் பாடங்களை கற்றுக் கொள்வார்கள். அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவிக்க முயற்சிப்போம். இவ்வாறு லஷ்மண் கூறினார். டாம் மூடி, முத்தையா முரளிதரன் ஆகியோரும், ஐபிஎல் 12வது சீசனில் சன்ரைசர்ஸ் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர். சன்ரைசர்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில், மார்ச் 24ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: