வாக்குப்பதிவை அதிகரிக்க ஒரு லட்சம் விழிப்புணர்வு அஞ்சல் அட்டை : தூத்துக்குடியில் புதுமை நடவடிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக, தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி, கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்து பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தேவையான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மூலம் பல்வேறு இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலின்போது வாக்குகள் குறைவாக பதிவான பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமங்களை விட நகர்ப்புற பகுதிகளில் தான் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் வேட்பு மனுத்தாக்கல் இறுதி நாளான வரும் 26ம் தேதி வரை பெயர் சேர்த்துக் கொள்ளலாம்.

கடந்த தேர்தலின்போது ஸ்பிக்நகர் 35 சதவீதம், ஸ்டேட் பேங்க் காலனி 41.44 சதவீதம், துறைமுகம் பகுதியில் 45.12 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல்கட்டமாக 1000 அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1 லட்சம் கார்டுகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பயிற்சி சப்கலெக்டர் அனு, தூத்துக்குடி தலைமை அலுவலக கோட்ட கண்காணிப்பாளர் ஷீஜா, உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் சுரேஷ்குமார், பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜாண்சன் தேவ சகாயம், தலைமை அஞ்சல் அலுவலர் ராஜா, தபால்துறை மக்கள் தொடர்பு அலுவலர் மனோகர் தேவராஜன் மற்றும் அஞ்சல் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: