×

வாசுதேவநல்லூரில் 400 மீட்டருக்கு சாலை போடாததால் 6 கிமீ சுற்றி செல்லும் 20 கிராம மக்கள்

சிவகிரி: வாசுதேவநல்லூரில் 400 மீட்டர் தூரத்துக்கு சாலை வசதியில்லாததால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 20 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சுமார் 6 கிமீ தூரம் சுற்றிச் செல்லும் அவலம் உள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு மேற்கே உள்ள பெரியகுளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர், கலிங்கல் ஆறு வழியாக நகருக்குள் வந்து கிழக்கே உள்ள பனையூர் நோக்கிச் செல்கிறது. வாசுதேவநல்லூர் 1வது வார்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவின் கீழ்ப்பகுதியில் செல்லும் கலிங்கல் ஆற்றின் மேற்புறத்தில் 400 மீட்டர் தூரத்திற்கான மங்கம்மாள் சாலை வண்டிப்பாதை பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்த வண்டிப்பாதைதான் வாசுதேவநல்லூருக்கும், வாசுதேவநல்லூருக்கு கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடக்கு திசையிலுள்ள ராயகிரி, சரவணாபுரம், ராமநாதபுரம், மேட்டுப்பட்டி, வேலாயுதபுரம், திருமலாபுரம், நாரணபுரம், ஏமன்பட்டி, தும்பைமேடு, கீழப்புதூர், கூடம்பட்டி உள்ளிட்ட 20 கிராமத்திற்குமான இணைப்புப் பாதையாக மங்கம்மாள் சாலை என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த 20 கிராம மக்களும் ராஜபாளையம்  தென்காசி மாநில நெடுஞ்சாலை, திருமங்கலம்  கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வசதிகள் வருவதற்கு முன்பு வாசுதேவநல்லூர் பகுதிக்குள் நுழைவதற்கு நாரணபுரம் வழியாக மங்கம்மாள் சாலையையே பயன்படுத்தி வந்தனர். மேலும் நாரணபுரம் பகுதியில் உள்ள இலங்குளம், முள்ளிக்குளம், சின்னப்பாறைக்குளம், பெரியபாறைக்குளம், அருகன்குளம், மூக்கிகுளம் ஆகிய குளத்து பாசனத்தைச் சேர்ந்த சுமார் 1500 ஏக்கர் விளை நில விவசாயிகளும், தங்களது விளைபொருட்களை மாட்டுவண்டிகள் மூலம் இந்த சாலை வழியாகத்தான் கொண்டு சென்று வந்துள்ளனர்.இதனிடையே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாசுதேவநல்லூர் நகரின் கழிவுகளும், சாக்கடை நீரும், கலிங்கல் ஆற்றில் கலந்து வந்ததால் மங்கம்மாள் சாலை வண்டிப்பாதையில் சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு சேறும், சகதியும் மாறி முட்புதர்கள் வளர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதையை அடைத்துள்ளது.

இதனால் கிராம மக்களும், விவசாயிகளும் இச்சாலையை பயன்படுத்த முடியாமல் நாரணபுரத்திற்கு மேற்கே சிந்தாமணிப்பேரி புதூர் வழியாக வாசுதேவநல்லூருக்கு 6 கிமீ சுற்றிச் சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் இப்பகுதி கிராம மக்கள், காலங்காலமாக இருந்து வந்த வழித்தட பயண உரிமையை இழந்துள்ளனர். மேலும் கால விரயமும், பண விரயமும் ஏற்படுவதால் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாசுதேவநல்லூர் 1 மற்றும் 2வது வார்டு பகுதியில் வசித்து வரும் 5 சமுதாயத்தை சேர்ந்த மக்கள், சுடுகாட்டுக்கு செல்லுவதற்கு இந்த வழியைத்தான் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த 400 மீட்டர் பாதை பயன்படுத்த முடியாததாக இருப்பதால் முட்புதர்கள் சூழ்ந்த சேறுக்குள் இறங்கி சடலத்தை சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிராம மக்கள் சார்பில் வாசுதேவநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார், ஆர்டிஓ, கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நாரணபுரத்தை சேர்ந்த சுப்பையா குற்றம் சாட்டினார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மங்கம்மாள் சாலை வண்டிப்பாதையில், 400 மீட்டர் தூர வழிப்பாதையை தார் சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : villages ,Vasudevanallur , Vasudevanallur, road,villagers
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு