×

பேரணாம்பட்டு அருகே மசிகம் ஆற்றில் மீண்டும் மணல் கடத்தல்

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே மசிகம் ஆற்றில் மீண்டும் மணல் கடத்தல் தொடங்கியுள்ளதாகவும், இதற்கு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் உடந்தை எனவும் விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். பேரணாம்பட்டு அடுத்த மதினாப்பள்ளி மலட்டாற்றில் இருந்து தினந்தோறும் டிப்பர் லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் மணல்  கடத்தப்படுவதை அறிந்த கிராமமக்கள் பலமுறை வருவாய்துறையினர், காவல் துறை, அரசின் உயர் அதிகாரிகள், கலெக்டர் உட்பட அனைவருக்கும் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் அரசியல் பின்னணியில் இந்த மணல்கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி பாலாற்றில் மணல் கொள்ளை நடந்ததை அம்பலப்படுத்தும் வகையில் விவசாய சங்கத்தினரும், மசிகம் கிராம மக்களும் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து சில நாட்களுக்கு மணல் கடத்தலை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில், மீண்டும் கடத்தல் கும்பல் மணல் கடத்த முயற்சி எடுப்பதை அறிந்த விவசாய சங்க மாவட்ட அமைப்பாளர் ராமதாஸ்  உட்பட கிராம மக்கள் நேற்று முன்தினம் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் குமாரிடம் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மணல் கடத்தப்படுவதை அறிந்த விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் மசிகம் பஸ் நிறுத்தம் அருகே ஏரிகுத்தியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சொந்தமான மணல் கடத்தி வந்த  டிராக்டரை தடுத்து நிறுத்தி பேரணாம்பட்டு தாசில்தார் செண்பகவல்லிக்கு தகவல் தெரிவித்தனர். இதில், விவசாய சங்கத்தினர் டிராக்டரின் டயரிலிருந்து காற்று பிடுங்கியபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மற்ற டிராக்டர்கள் கிராம மக்கள் பிடியிலிருந்து தப்பின. தகவலறிந்து சம்பவ இடம் வந்த விஏஓக்கள் சுரேஷ், முரளி ஆகியோர் டிராக்டரை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு தெரிவித்தனர்.

மேலும், கடத்தப்பட்ட மணலை சாலை ஓரம் கொட்டிவிட்டு அந்த   டிராக்டரை   தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு  செல்லாமல்  மாறாக வேறு ஒரு பழைய டிராக்டர் தாலுகா அலுவலகத்தில் நிற்பதை கண்டு விவசாய சங்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த கடத்தல் நாடகத்திற்கு வருவாய்துறையினரும், காவல்துறையினரும் துணை போவது விவசாய சங்கத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்றம் நீர் நிலைகளை தூர்வாரி குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவு காற்றிலே பறக்கிறது என்று பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Masikam ,river ,Paranampattu , Pernampattu, sand, kidnapping
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி