×

8 ஆண்டுகளுக்கு முன் மாயமானவர் திருப்பதியில் மீட்கப்பட்ட வாலிபர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே 8 ஆண்டுகளுக்கு முன் மாயமான சிறுவனை திருப்பதியில் போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அமைந்துள்ள கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் தமிழ் (எ) விவேக். இவர் கடந்த 2011ம் ஆண்டு  தனது வீட்டினருகில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது திடீரென ஒருநாள் மாயமானார். இதுகுறித்து சக்திவேல் சோழத்தரம் போலீசில் அப்போதே புகார் செய்தார். அதில் தனது மகன் குடும்பத்தகராறு காரணமாக கடத்தப்பட்டிருக்கலாம் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன விவேக்கை பல இடங்களிலும் தேட ஆரம்பித்தனர். இருப்பினும் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளராக இருக்கும் பாலகிருஷ்ணன் பெரும் முயற்சி மேற்கொண்டு கடலூர் மாவட்ட காவல்துறை சைல்டுலைன் மூலம் விவேக்கை தீவிரமாக தேட ஆரம்பித்தார். இது ஒருபுறம் இருக்க சேத்தியாத்தோப்பு காவல் உட்கோட்ட டிஎஸ்பி ஜவஹர்லால் அமைத்துள்ள தனிப்படை குழுவினரான சப்இன்ஸ்பெக்டர்கள் மாயசந்திரன், வேலாயுதம், ஏட்டுக்கள் கோபி, சாமிநாதன், ராஜா உள்ளிட்ட போலீசார் மற்றொரு கோணத்தில் விவேக்கை தேடி வந்தனர்.

போலீசாருக்கு மிக பெரும் சவாலாக இருந்த இவ்விவகாரத்தில் மாவட்ட காவல்துறை சைல்டு லைன் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன  விவேக் தற்போது அவர் திருப்பதி திருமலைப்பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற தனிப்படை குழுவினர் 2 நாட்கள் அப்பகுதியில் முகாமிட்டு சரியாக விவேக்கை அடையாளம் கண்டு, அவரை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தெரிவிக்கும் போது, வீட்டிலிருந்து காணாமல் போன விவேக் முதலில் சிதம்பரம் சென்று அங்கிருந்து எப்படியோ சென்னை, கர்நாடகா சென்றுள்ளார்.

அப்போது கையில் கிடைத்த வேலையை செய்து பிறகு கேட்டரிங் அசிஸ்டெண்டாக ஒருவரிடம் வேலை பார்த்து திருப்பதி திருமலையில் தங்கியிருந்து வந்தார். தற்போது இவருக்கு 23 வயதாகிறது. மேலும் இவர் மீது எவ்விதமான குற்ற நடவடிக்கைகளும் இல்லாததால் நடைமுறைப்படி இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். விவேக்குடன் பிறந்தவர்கள் 2 சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒருவரை தீவிரமாக தேடி கண்டுபிடித்த ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parent , Tirupathi, youth, parent
× RELATED எழிலூர் அரசு பள்ளி ஆண்டு விழா