களை இழந்து வரும் ஏலகிரி மலை சுற்றுலா தலம் : 20 ஆண்டாக தூர் வாராததால் ஏரியில் தண்ணீர் குறைந்தது

ஜோலார்பேட்டை:  ஏலகிரி மலையில் உள்ள ஏரி 20 ஆண்டாக தூர் வாராததால் சுற்றுலா தலம் களை இழந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ளது ஏலகிரிமலை. கடந்த 1999ம் ஆண்டு சுற்றுலாதலமாக உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. சுற்றுலாதலமாக அறிவிக்கப்பட்டபோது இருந்த இயற்கை பூங்கா, குழந்தைகள் பூங்கா, படகு இல்லம், முருகன் கோயில், புங்கனூர் படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் போதிய பராமரிப்பு இன்றி தற்போது களை இழந்துள்ளது. குறிப்பாக நிலாவூர் படகுத்துறை பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.

புங்கனூர் படகுத்துறை மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த புங்கனூர் ஏரி மழைக்காலத்தில் மட்டுமே நிரம்பி வருகிறது. இந்நிலையில், தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஏரியில் உள்ள தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே பெரிய, பெரிய கற்கள் வெளியே தெரிகிறது. இது படகுசவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரி 20 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் ஆழம் குறைந்து மழைக்காலத்தில் ஏரியில் நிரம்பும் தண்ணீர் நீண்ட நாட்களுக்கு தாக்குபிடிக்க முடியவில்லை. ஏரியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய தயங்குகின்றனர். பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

அதேபோல் படகு சவாரி செய்தபிறகு படகில் இருந்து இறங்கும் படிக்கட்டுகள் சிதலமடைந்துள்ளது. தண்ணீர் இருக்கும் இடம்வரை படிக்கட்டுகளை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான எந்த நடவடிக்கைகளும் இல்லாததால் தற்போது தண்ணீருக்குள் வரை மரக்கட்டைகளால்  பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்றும்  சுற்றுலா பயணிகள் அச்சமடைகின்றனர். எனவே புங்கனூர் ஏரியை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி ஏரியில் தூர்வாரி போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி படகு செல்ல முறையான படிக்கட்டுகள் அமைத்து ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி படகு சவாரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களை முறையாக பராமரித்து சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: