×

தாளவாடி அருகே கொங்கள்ளி மல்லிகார்ஜூனசாமி கோயில் குண்டம் விழா : ஆண்கள் மட்டும் பங்கேற்பு

சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கொங்கள்ளி மல்லிகார்ஜூனசாமி கோயில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. தாளவாடியிலிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள கொங்கள்ளி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் மல்லிகார்ஜூனசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமியை அழைத்தபடி மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய நடனமாடியபடி பக்தர்கள் கோயிலை சுற்றியபடி குளத்திற்கு சென்றனர். குளத்தில் பூஜைகள் செய்தபின் கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட குண்டத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பூசாரி கவியப்பதேவர் பக்தி பரவசத்துடன் இறங்கி நடந்து வந்தார்.

பின்னர் பக்தர்கள் அனைவரும் குண்டத்தை வணங்கி அதில் உள்ள சாம்பலை விபூதியாக எடுத்து பூசினர். இக்கோயிலில் பூசாரி ஒருவர் மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். பெண்கள் இக்கோயிலுக்கு வர அனுமதியில்லை. கோயிலுக்கு ஒரு கி.மீ., முன்பே பெண்கள் வருவது தடுக்கப்படுகிறது. ஆண்களே பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். தமிழக கர்நாடக மாநில எல்லையில் கோயில் உள்ளதால், கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகர், மைசூர், மாண்டியா, குண்டல்பேட்டை பகுதிகளிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kulkunni Mallikarjunasamy Temple Kundam Festival ,Thalawadi , Thalawadi, Mallikarjunasamy Temple, Mens
× RELATED சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!