ஒன்றரை வயது பெண் குழந்தையை ரயிலில் தனியாக ஏற்றிவிட்ட தந்தை : சேலத்தில் போலீசார் மீட்டு ஒப்படைப்பு

சேலம்: ஈரோட்டில் ரயில் வேகமாக புறப்பட்டபோது, ஏறிவிடலாம் என நினைத்து ஒன்றரை வயது பெண் குழந்தையை தந்தை ஏற்றிவிட்டு தவிப்பிற்கு உள்ளானார். சேலம் ரயில்வே போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மத்தியபிரதேச மாநிலம் மொரினா சிங்ரோலி பகுதியை சேர்ந்தவர் ராம்பரன் (38). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர், தனது மனைவி சரஸ்வதி, மகன் சந்தேர்தர் (12), ஒன்றரை வயது மகள் இந்து, 3 மாத ஆண் குழந்தை ஆகியோருடன் பொள்ளாச்சியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, சொந்த ஊர் செல்வதற்காக குடும்பத்துடன் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்துள்ளார். அங்கு குவாலியர் எக்ஸ்பிரசின் முன்பதிவில்லா பெட்டியில் செல்ல டிக்கெட் எடுத்த ராம்பரன், அப்போது அவ்வழியாக வந்த திருவனந்தபுரம்-நியூடெல்லி எக்ஸ்பிரசில் முன்பதிவு பெட்டியில் குடும்பத்துடன் ஏறிக்கொண்டார்.

அந்த ரயில், ஈரோடு பகுதியில் இரவு 10 மணிக்கு வந்தபோது, டிக்கெட் பரிசோதகர் சோதனையிட்டு, முன்பதிவில்லா பெட்டிக்கு செல்லும்படி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் ரயில் நின்றதும், ராம்பரனை குடும்பத்தினருடன் அவர் கீழே இறக்கிவிட்டார். அப்போது அவர்கள், ரயில் புறப்படுவதற்கு முன் முன்பதிவில்லா பெட்டியில் ஏற கடைசி பெட்டியை நோக்கி சென்றுள்ளனர். அந்த நேரத்தில் ரயில்புறப்பட்டு விட்டது. இதனால், வேகமாக ஏறிவிடலாம் என நினைத்து ஏசி பெட்டி வாசலில் தனது ஒன்றரை வயது மகள் இந்துவை ஏற்றிவிட்டுவிட்டு, ஒரு பேக்கையும் தூக்கி வைத்தார். அடுத்த சில நொடிகளில் ரயில் வேகமாக புறப்பட்டுச் சென்றது. இதனால், தனது மகளை மட்டும் ரயிலில் ஏற்றிவிட்டு விட்டோமே என கதறினார்.

பின்னர், தனது மனைவி சரஸ்வதி மற்றும் மற்றொரு மகன், கைக்குழந்தையுடன் ஈரோடு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தெரிவித்தார். அங்கிருந்த போலீசார், சேலம் ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு, ரயிலில் ஒன்றரை வயது குழந்தை மட்டும் வருவதை தெரிவித்தனர். இதையடுத்து சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இரவு 11 மணிக்கு நியூடெல்லி எக்ஸ்பிரஸ் வந்தவுடன், குறிப்பிட்ட பெட்டியில் சென்று போலீசார் குழந்தையை தேடினர். அங்கு, டிக்கெட் பரிசோதகர் அந்த குழந்தையை எடுத்து வைத்திருந்தார். போலீசார் வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைத்தார். இதன்பின், ஈரோட்டில் இருந்த அவரது தந்தை ராம்பரனுக்கு தகவல் கொடுத்தனர். அடுத்த ரயிலில் தனது குடும்பத்துடன் ராம்பரன் சேலம் வந்தார். அவரிடம் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார், குழந்தை இந்துவை ஒப்படைத்தனர். ரயிலில் குழந்தைகளுடன் பயணிக்கும் போது, மிக கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர். பின்னர் அடுத்த ரயிலில் மத்திய பிரேதேசத்திற்கு ராம்பரன் தனது குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: