விவாகரத்து வழக்கு விசாரணையின் போது நீதிபதி முன்பு மனைவிக்கு கத்திக்குத்து

* கணவன் கைது * நீதிமன்றத்தில் பரபரப்பு

சென்னை: விவாகரத்து வழக்கு விசாரணையின் போது, நீதிபதி கண் முன்பே மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்புத்தூர், சிறுவஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (44). இவர், சென்னை, மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்பவருடன் திருமணமாகி, 10 வயதில் மகனும், 12  வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரின் குடும்ப வாழ்க்கையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மன உளைச்சலின் காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். பின்னர், கடந்த 2009ம் ஆண்டு வரலட்சுமி விவாகரத்து கோரி சென்னை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைதொடர்ந்து 2011ம் ஆண்டு ஜீவனாம்சம்  கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளும் விசாரணையில் உள்ளது. அடிக்கடி, நீதிமன்றம் வரவேண்டி உள்ளதாலும், எந்த தீர்வும் கிடைக்காததாலும் சரவணன் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக கணவன், மனைவி இருவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இருவரும் நீதிபதி இளங்கோ முன்பு ஆஜராகினர்.

அப்போது வரலட்சுமி நீதிமன்றத்தின் உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். வழக்கம் போல் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அப்போது அருகே இருந்த சரவணன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நீதிபதி கண்  முன்பே வரலட்சுமியின் மார்பில் குத்தினார். உடனே அருகில் இருந்தவர்கள், சரவணனை பிடித்து தாக்கினர். நீதிபதி தனது அறைக்கு சென்றுவிட்டார். பின்னர் வளாகத்தில் இருந்த போலீசார் வரலட்சுமியை மீட்டு, ஆம்புலன்ஸ்  மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் சரவணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து குடும்ப நல நீதிமன்றத்துக்கு உதவும் நபராக, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் கூறியதாவது:

8 குடும்ப நல நீதிமன்றத்தில் 5ல் மட்டுமே நீதிபதிகள் உள்ளனர். சட்டத்தின்படி பொதுவாக வழக்குகள் 6 மாதத்திற்குள் முடிய வேண்டும். ஆனால் இங்கோ பல வருடங்கள் கடந்து வழக்குகள் நடத்தப்படுகிறது. இதுவே முக்கிய  பிரச்னையாக உள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, உயர் நீதிமன்றம் போல் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விசாரணைக்கு சரவணன் நீதிமன்றத்துகுள் வரும்போது போலீசார் அவரை சோதனை செய்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: