புதிய முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவிப்பு கோவா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

பனாஜி: கோவாபுதிய முதல்வர் பிரமோத் சாவந்த், இன்று சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் பாஜவின் பலம் 12 ஆக சரிந்தது. 14 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும்பான்மை கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு காங்கிரஸ், அம்மாநில ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது. இதனால், பாரிக்கரின் இறுதிச்சடங்கு நடந்த நேற்று முன்தினமே ஆட்சியை தக்க வைக்க புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் பாஜ தீவிரமாக ஈடுபட்டது. புதிய முதல்வராக பிரமோத் சாவ்ந்த தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவே அவர் பதவியேற்றார். அவருடன் பாஜவின் கூட்டணி கட்சிகளான கோவா முன்னணி கட்சி தலைவர் விஜய் தேசாய், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி தலைவர் சுதின் தவாலிகர் இருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

புதிய முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று காலை முதல்வர் அலுவலகத்திற்கு வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மேலும், சட்டப்பேரவையில் பாஜ அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார். 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் தற்போது 36 உறுப்பினர்கள் உள்ளனர். 4 இடங்கள் காலியாக உள்ளன. இதில், பாஜ 12 எம்எல்ஏக்களையும், அதன் கூட்டணியில் உள்ள கோவா முன்னணி, எம்ஜிபி, சுயேச்சைகள் தலா 3 எம்எல்ஏக்களையும் கொண்டுள்ளன. காங்கிரஸ் 14 எம்எல்ஏக்களையும், அதன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் ஒரு எம்எல்ஏவையும் கொண்டுள்ளது. இதனால், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜ ஆட்சிக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிக்கர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கரின் பனாஜி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி குணால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பனாஜி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தேர்தல் தேதி பின்பு முடிவு செய்யப்படும்’’ என்றார். ஏற்கனவே, மறைந்த பாஜ எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசாவின் மபுசா தொகுதியும், கட்சி தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவரின் ஷிரோடா, மன்டிரீம் தொகுதியும் காலியாக உள்ளது. இம்மூன்று தொகுதிக்கும், மக்களவை தேர்தலுடன் சேர்த்து வரும் 23ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: