தஞ்சை அதிமுக வேட்பாளருக்கு எதிராக தலையாட்டி பொம்மை வியாபாரிகள் பிரசாரம்

தஞ்சை: தஞ்சை தலையாட்டி பொம்மை வியாபாரிகளை நடுத்தெருவிற்கு கொண்டு வந்த அதிமுக வேட்பாளர் காந்திக்கு எதிராக பிரசாரத்தை துவக்கி விட்டோம் என தலையாட்டி பொம்மை வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் அதிருப்தி அதிமுகவினரும் எதிராக செயல்பட துவங்கிவிட்டனர்.  இதனால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.தஞ்சை எம்எல்ஏவாக இருந்த ரங்கசாமி  தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே தஞ்சை சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான தமாகாவிடம் விட்டு கொடுத்துவிட்டு தஞ்சை சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற நோக்கோடு அதிமுக களம் இறங்கியுள்ளது. இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தியது.

இந்நிலையில்ட சீட் கேட்பவர்கள் பட்டியலில் இல்லாமல் இருந்த தஞ்சை தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு நெருக்கமானவருமான பால்வளத்த்தலை காந்திக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் பகுதி செயலாளர்கள் அதிருப்தி அடைந்து எப்படியும் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தே தீரவேண்டும் என முடிவு செய்துள்ளனர்.இந்த நேரத்தில் எங்களை நடுத்தெருவிற்கு வரவழைத்த அதிமுக வேட்பாளர் காந்தியை தோற்கடித்தே தீருவோம் என்று தஞ்சை பெரிய கோயில் தலையாட்டி பொம்மை வியாபாரிகள் முனைப்புடன் செயல்பட தொடங்கிவிட்டனர். இதற்கான பிரசாரத்தையும் மறைமுகமாகவே தொடங்கி விட்டனர். இதுகுறித்து  தஞ்சை பெரிய கோயில் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயக்குமார் கூறியதாவது: தஞ்சை பெரிய கோயில் எதிரே உள்ள அகழியை ஒட்டி அமைந்துள்ள சுற்றுசுவரை சுற்றிலும் கடந்த 20 ஆண்டு காலத்திற்கும் மேலாக 33 பேர் தரைக்கடை அமைத்து தலையாட்டிபொம்மை விற்பனை செய்து பிழைப்பை நடத்தி வந்தோம்.

 கடந்த 2010ம் ஆண்டு தஞ்சை பெரிய கோயில் 1000வது ஆண்டு விழாவின் பாதுகாப்பு கருதியும்  கோயில் எதிரே உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் கடை போட்டுக்கொள்ளும்படி தலையாட்டி பொம்ைம வியாபாரிகளிடம் அப்போதை கலெக்டர் கூறினார்.  இதையடுத்து நாங்களும் பெரிய கோயில் எதிரே, ராஜாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியின் சுற்றுசுவரை ஒட்டி  33 பேரும் தலையாட்டிபொம்மை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய கடை அமைத்தோம். அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுகவினர் சிலர், குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். இல்லையெனில் நாங்களும் கடை போடுவோம் என்று மிரட்டினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கடைகளை அகற்ற வேண்டும் என்று திட்டமிட்டு தஞ்சை பெரிய கோயிலில் கடந்த 2014ம் ஆண்டு தேரோட்டத்தை காரணம் காட்டி   இரவோடு இரவாக தலையாட்டிபொம்மை விற்பனை செய்த 33 கடைகளையும் போலீசார் உதவியுடன் அதிராடியாக அகற்றினர். போராட்டம் நடத்தியதால் கைதுசெய்யப்பட்டோம்.

இதுபற்றி மேயராக இருந்த சாவித்திரிகோபாலிடம் முறையிட்டதற்கு, எங்கள் கட்சிகாரர்களை எதிர்த்து கடைபோடுவீர்களா என்று மிரட்டி அனுப்பினார். இதன்பின்னர் வைத்திலிங்கத்திடம் நெருங்கிய தொடர்பில் இருந்த தற்போதைய அதிமுக வேட்பாளர் காந்தியின்(தற்போது வேட்பாளர்) வீட்டிற்கு சென்று எங்கள் குறையை தெரிவித்தோம். அவரும் மிரட்டி திருப்பி அனுப்பினார். இதனால் நடுத்தெருவில் நிற்கிறோம். எங்களை நடுத்தெருவிற்கு அனுப்பிய அதிமுக வேட்பாளர் காந்திக்கு எதிராக நாங்கள் பிரசாரம் தொடங்கி உள்ளோம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: