×

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகம் முழுவதும் இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல்...தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட  தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி நடக்க உள்ள நிலையில், ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை  தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம்  மற்றும் புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று  தொடங்கியது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் ஏறக்குறைய கூட்டணிகள் முடிவாகி, கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.  தமிழகத்தில், திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு  மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகள் உள்ளது. இதுபோல் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா மற்றும் புதிய தமிழகம்  உள்ளது. இதில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதி வேட்பாளர்  பட்டியலை வெளியிட்டுள்ளது. தாங்கள் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று இரவு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்கட்ட தேர்தல்  நடக்க உள்ள 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 25ம் தேதி வேட்புமனு  தாக்கல் செய்ய இறுதி  நாளாகவும், 26ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 28ம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுதலும், ஏப்ரல் 11ம் தேதி  வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்குவதையொட்டி பாதுகாப்பு  ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக தேர்தல் அதிகாரி, தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வடசென்னையில் 4 வேட்பாளர்களும், தென் சென்னையில் 3 வேட்பாளர்களும், திருப்பூர் மற்றும் ராமநாதபுரத்தில்  தலா 2 வேட்பாளர்கள் என மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Satyabrata Sahu ,Tamil Nadu , Parliamentary Elections, Tamilnadu, Nomination, Tamil Nadu Election Officer Satyabrata Sahay interview
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...