ஜி.கே.வாசனின் சித்தப்பா மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசனின் சித்தப்பா ஜி.ஆர்.மூப்பனார் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் காலமான அவரின் மறைவிற்கு பல்வேறு கட்சியின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், ஜி.ஆர்.மூப்பனாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி.ரங்கசாமி மூப்பனார் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனாரின் இளைய சகோதரரான ஜி.ஆர். மூப்பனார் கல்வி, கலை, ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவராக இருந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பாரதியார் பேரவையின் தலைவராக செயல்பட்டு பாரதியாரின் பெருமைகளை பரப்பி வந்தார். பார்க்கவ குல சங்கத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்து அச்சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக உண்மையாக பங்களித்து வந்தார். ஜி.ஆர். மூப்பனாரின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இது பேரிழப்பு ஆகும். ஜி.ஆர். மூப்பனாரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: