தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை : கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 18ம்தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும்படையில் 39 குழுவினர், நிலைக்கண்காணிப்பு குழுவில் 39 குழுவினர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.தாசில்தார் நிலையில் உள்ள ஒருவர், காவலர், டிரைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டு, இவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனங்களில், பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இதற்காக இவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை அருகே மதுக்கரை மரப்பாலத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அபிலாஷ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி காரில் இருந்து ரூ.10 லட்சத்து 64 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே போல கோபிச்செட்டிபாளையம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சிங்கேரிபாளையத்தை சேர்ந்த நரேந்திரன் என்பரிடமிருந்து ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் பத்மா ஏஜென்சி என்ற நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 10 டன் மூட்டை மூட்டையாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் அதிகளவிலான மதுவகைகள் கடத்த வாய்ப்பு உள்ளதால் தேர்தல் பறக்கும் படை மதுவிலக்கு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரல் அருகேயுள்ள வால்டாக்ஸ் சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி லலித் என்பவர் காரில் கொண்டு வந்த 17 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: