மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி

மதுரை: மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் 70 பறக்கும் படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது மேலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி  ரூ.3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் கும்பகோணத்தில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தர உள்ளனர். நகையின் மதிப்பீட்டினை முழுமையாக ஆய்வு செய்து பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும். அதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இருந்தால் நகை திருப்பி வழங்கப்படும். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: