போலி ஆவணம் தயாரித்து வீட்டை அபகரிக்க முயற்சி: காவல் நிலையத்தில் மூதாட்டி புகார்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், காந்தி தெருவை சேர்ந்தவர் சசிகலா (61). இவரது கணவர் ராஜேந்திரபாபு கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகள்கள் ஜெயஸ்ரீ, வித்யா ஆகியோர் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர். சசிகலா மட்டும் சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த 7ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது நிலம் மற்றும் வீட்டை இஸ்மாயில், சரவணன், செந்தில்குமார் என்பவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து இருந்தார்.  

இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  ஆனால் இதுவரை பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து சசிகலா கூறுகையில், ‘‘கடந்த 1979ம் ஆண்டு என் கணவர் ராஜேந்திரபாபு இந்த இடத்தை வாங்கினார். தற்போது நான் மட்டும் தனியாக இங்கு வசித்து வருகிறேன். எனது மைத்துனர் நாகராஜ் என்பவர் இந்த நிலத்தின் மீது பொய் ஆவணம் தயார் செய்து தாம்பரம் நிலவரித்திட்ட அலுவலகத்தில் பட்டா பெற்று படப்பை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இஸ்மாயில் என்பவருக்கு பத்திர பதிவு செய்துள்ளார்.

இதுபற்றி தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில் இடம் எங்களுக்குத் தான் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 1.3.2019 அன்று பத்திரம் மற்றும் 4.3.2019 அன்று கிரய ஒப்பந்தப் பத்திரம் படப்பை பதிவு அலுவலகத்தில் முகமது இஸ்மாயில், செந்தில்குமார் மற்றும் சரவணன் என்பவர்கள் என்னுடைய சொத்தை விற்பனை செய்வதற்கு பவர் கொடுத்தும் கிரய ஒப்பந்தம் செய்தும் பதிவு செய்துள்ளார்கள். எனவே என்னுடைய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த இஸ்மாயில், சரவணன், செந்தில்குமார் ஆகியோர் மீது சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: