தமிழகம் முழுவதும் உள்ள கோயில் சொத்துக்களை டிஜிட்டலாக்கி ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: சென்னையை சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை கள்ளழகர்  கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க கோரி, 2018, நவ. 16ல் அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணிந்தர் ரெட்டி ஆஜராகி, கோயில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்பது குறித்து விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கை தாக்கல் செய்தார்.  

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள், சொத்துக்களை டிஜிட்டல்மயமாக்கி ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், சொத்து விவரங்களை புத்தகமாக அச்சடித்து கோயிலில் மக்கள் பார்வைக்கும் கோயில் அலுவலகத்திலும் வைக்க வேண்டும். இந்த புத்தகங்களை அந்தந்த பகுதிக்குட்பட்ட பத்திரப்பதிவு அலுவலக அதிகாரியிடம் கொடுத்து, அதில் உள்ள சொத்துக்களை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை கொடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விரிவான உத்தரவுக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: