சென்னையின் பல இடங்களில் கைவரிசை போலீசார் போல் நடித்து பணம் பறிக்கும் ஆசாமிகள்

* காவலரையே ஏமாற்றியது அம்பலம்

* வெளியில் நடமாட மக்கள் அச்சம்

கோயம்பேடு: சென்னையின் பல இடங்களில் மர்ம நபர்கள் சிலர் போலீசார் போல் நடித்து பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகளிடம் நூதன முறையில் பணம் பறித்து வருவதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.  

கோயம்பேடு காவல் நிலையத்தில் பாபு சுரேஷ் என்பவர் காவலராக பணியாற்றி வருகின்றார். கடந்த வாரம் இவர், பைக்கில் ரோந்து சென்றபோது, வழியில் போலீஸ் சீருடையுடன் இவரை சந்தித்த ஒருவர், ‘‘நான், டிஜிபி அலுவலகத்தில் உளவு பிரிவில் பணிபுரிந்து வருகிறேன். கோயம்பேடு காவல் நிலையத்தில் காவலர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, என கண்காணிக்க மேலிடம் எனக்கு உத்தரவிட்டுள்ளது,’’ என்றுள்ளார்.

இதை நம்பிய பாபு சுரேஷ், அவரிடம் மரியாதையாக நடந்து ெகாண்டுள்ளார். பின்னர், பாபு சுரேஷை பார்க்கும் போதெல்லாம், டீ, டிபன், சாப்பாடு என ஏமாற்றி சாப்பிட்டு வந்துள்ளார். இதனிடையே, மேற்கண்ட நபர் பற்றி போலீசார் வட்டாரத்தில் பாபு சுரேஷ் விசாரித்தபோது, அவர், போலி போலீஸ் என்று தெரியவந்தது. இதையடுத்து, சமீபத்தில் அந்த நபரை பொறி வைத்து பிடித்த சுரேஷ் பாபு, அவரை காவல் நிலையம் ெகாண்டு வந்து விசாரித்தார். அதில், செங்கோட்டையை சேர்ந்த தட்சணாமூர்த்தி (25) என்பது தெரிந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  

இதேபோல், ஐசிஎப் பகுதியில் போலீஸ் சீருடையில் சுற்றி வந்த ஆசாமி, வாகன ஓட்டிகள், வியாபாரிகளிடம் பணம் பறித்து வந்துள்ளார். ஆவடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சேகர் (30) கடந்த 3ம் தேதி ஐசிஎப் பகுதியில் நடந்து சென்றபோது, போலீஸ் சீருடையில் வந்த ஆசாமி, சேகரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தபோது, அயனாவரத்தை சேர்ந்த தமிழரசன் (35), போலீஸ் போல் நடித்து பணம் பறித்து வந்தது தெரிந்தது. அவரை ஐசிஎப் போலீசார் கைது செய்தனர்.

* வளசரவாக்கம் பிருந்தாவன் நகரை சேர்ந்த உதயகுமார் (40), தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 14ம் தேதி கம்பெனி ஊழியர்களின் சம்பளம் பணம் ரூ.1.7 கோடியை அடையாறில் இருந்து சைதாப்பேட்டை வழியாக காரில் எடுத்துச் சென்றபோது, ஒரு ஜீப்பில் வந்த நபர், திடீரென காரை வழிமடக்கி நான் போலீஸ் எனக்கூறி காரை சோதனையிட்டுள்ளார். பின்னர், காரில் இருந்த பணத்திற்கு முறையான ஆவணம் இல்லை எனக்கூறி, காவல் நிலையத்துக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறிவிட்டு, பணத்துடன் தப்பியுள்ளார். இதுகுறித்து உதயகுமார் சைதாபேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

* ஏழுகிணறு பெரியண்ணன் முதலி தெருவை சேர்ந்த கோபிநாத் (26) என்பவர், கடந்த வாரம் பேருந்தில் சென்றபோது, மர்ம கும்பல் பேருந்துக்குள் ஏறி, நாங்கள் போலீஸ் எனக்கூறி கோபிநாத் வைத்து இருந்த ரூ.98 லட்சத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து கோபிநாத் அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து போலி போலீஸ் கும்பலைத் தேடி வருகின்றனர். சென்னையில் இதுபோன்று பல இடங்களில் போலீசார் போல் நடித்து பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகளிடம் மர்ம நபர்கள் பணம் பறித்து வருவதால், பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்துள்ளனர். எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: