குடிநீரில் கழிவுநீர் கலப்பு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி 5வது மண்டலம், 50வது வார்டுக்கு உட்பட்ட ஷேக் மேஸ்திரி தெரு, பக்கீர் சாகிப் தெரு, உசேன் மேஸ்திரி தெரு, கௌஸ் முகையில் தெரு ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆங்காங்கே பைப்லைனில் உடைப்பு காரணமாக கடந்த 20 நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்  புகார் செய்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என கூறப்படுகிறது.

மேலும், ராயபுரம் அறிஞர் அண்ணா பூங்கா குடிநீரேற்று நிலையத்தில் உள்ள குடிநீர் வாரிய அதிகாரியை சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும எடுக்கவில்லை. இந்நிலையில், அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து மேற்கண்ட பகுதி மக்கள் நேற்று ராயபுரம் கிழக்கு  கல்மண்டபம் சாலையில் கழிவுநீர் கலந்த குடிநீர் பாட்டில்களுடன் திரண்டு ஆர்பாட்டம் செய்தனர். தகவலறிந்து வந்த ராயபுரம் போலீசார், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையேற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: