நன்மங்கலம் காப்புக்காட்டில் தீவிபத்து: 3 மணி நேரம் போராடி அணைத்தனர்

தாம்பரம்: நன்மங்கலம் காப்புக்காட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தாம்பரம் அடுத்த செம்பாக்கம் - திருமலை நகர் சாலையோரம் நன்மங்கலம் காப்புக்காடு உள்ளது. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் இந்த காட்டின் ஒரு பகுதியில், வேங்கை வாசல்பகுதி அருகில் உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள மைதானம் அருகில் திடீரென தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி செம்பாக்கம் - திருமலை நகர் செல்லும் வனப்பகுதி சாலை வரை தீ பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால், நன்மங்கலம் காப்புக்காட்டின் அருகில் உள்ள செம்பாக்கம், திருமலை நகர், மேடவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகள் முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.  

தகவலறிந்து தென்சென்னை தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையில் தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வேளச்சேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் என மொத்தம் மூன்று தீயணைப்பு வாகனங்களில் 18 தீயணைப்பு வீர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

இதனால் அங்கு சுமார் 10 ஏக்கரில் இருந்த மரங்கள் அனைத்தும் எரிந்தன. சேலையூர் காவல் நிலைய போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: