குட்கா முறைகேடு வழக்கில் ஆவணங்களை மறைத்த விவகாரம் டிஜிபி பதவி நீட்டிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை மறைத்த விவகாரத்தில் டிஜிபியின் பதவி நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்த டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவிநீட்டிப்பு பெற்றுள்ளார். குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு  வந்தபோது, டி.கே.ராஜேந்திரன் மீதான லஞ்சப்புகார் குறித்த வருமான வரித்துறையின் கடிதம், கோப்புகளை ஆராய்ந்த போது கிடைக்கவில்லை என தமிழக தலைமை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் அனைத்தும் போயஸ் கார்டனில் கடந்த 2017 நவம்பரில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது கிடைத்தன. டிஜிபியை தப்ப வைக்கவே இந்த ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும். குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த புதிய டிஜிபியை நியமிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்   என்று கூறப்பட்டிருந்தது.

Advertising
Advertising

  இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன்,  பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்குவது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அவருக்கு பணி நீட்டிப்புக்கான பரிந்துரை செய்தபோது அவர் மீதான லஞ்சப்புகார் தொடப்பான ஆவணங்கள் இல்லை என்று வாதிட்டார். அப்போது, முன்னாள்  டிஜிபி அசோக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல், லஞ்சப்புகார் தொடர்பான வருமான வரித்துறையின் கடிதம் முறைப்படி ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.  சசிகலா சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதாவின் வீட்டில்தான் வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றினர். இதில் சசிகலாவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: