அதிமுக முன்னாள் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு

* நோட்டாவுடன் போட்டியிட்ட கட்சிக்கு 5 சீட்

* ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது கடும் குற்றச்சாட்டு

சென்னை: நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கிய பாஜவுக்கு 5 சீட் வழங்கி, அதிமுகவை அடகு வைத்துவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் குற்றம் சாட்டியுள்ளார். அவர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதிமுகவில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். இதற்காக விருப்ப மனு அளித்தார். ஆனால் அவர் கேட்ட தொகுதியை பாஜவுக்கு அதிமுக வழங்கி விட்டது. தங்களுக்கு போட்டியாக ஒருவர் உருவாகக் கூடாது என்பதற்காக, அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த இரு நாட்களாக கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். பின்னர், நேற்று அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று மாலை சந்தித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜவின் கொத்தடிமைகளாக இருக்கும் அதிமுகவின் இரண்டு தலைமைகளின் செயல்பட முடியாத காரணத்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு எனது ஆதரவை தெரிவித்தேன். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா நலனுக்காக போராடும் கூட்டணியாகும்.  

அதிமுகவில் எனக்கு சீட் தரவில்லை என்பது பிரச்னை இல்லை. பாஜவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 தொகுதிகளில் தென் மாவட்டங்களில் 4 தொகுதிகளை கொடுத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. அதிமுகவில் விவாதம் இல்லாமல் கூட்டணி ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகமாக உள்ளது. இபிஎஸ் தரப்பினரை ஓபிஎஸ் ஆதரிக்க மாட்டார். இதைப்போன்று ஓபிஎஸ் தரப்பை இபிஎஸ் ஆதரிக்க மாட்டார். தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்பவர்கள் மற்றும் பணம் கொடுப்பவர்கள் மட்டுமே அதிமுகவில் உள்ளனர். தொண்டர்கள் யாரும்   அதிமுகவில் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் செல்வதை தடுக்கத்தான் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். ஆனால் ஓபிஎஸ் தன் மகனுக்காக சீட் தேவை என்பதற்காக 10 தொகுதிகளை தாரை வார்த்து விட்டார். மகனுக்கு சீட் வாங்க ஓபிஎஸ் கட்சியை தாரை வார்த்துவிட்டார். பாஜ சொல்வதை எல்லாம் கேட்டு கட்சியை அடகு வைத்து விட்டனர்.

அதிமுகவில் இப்போது உள்ள தலைவர்களுக்கு ஆளுமை இல்லை. அதிமுகவில் சீட் வாங்க தலைவர்கள் முன்பே   சண்டை நடக்கிறது. நாற்காலியை தூக்கி போட்டு சண்டை எல்லாம் சண்டை போட்டனர். ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் இருந்தால் இவ்வாறு நடக்குமா. ஓபிஎஸ் மகனுக்கு சீட் கொடுக்கும் போது எங்களது உறவினர்களுக்கும் சீட் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கேட்டனர். அதிமுகவில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்கவில்லை. நோட்டாவிற்கு கீழ் ஓட்டு வாங்கிய பாஜவிற்கு 5 தொகுதி கொடுத்தால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதனால் அதிமுவிலிருந்து விலகி திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தேன். எல்லாருடைய கருத்துக்களை கேட்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  கன்னியாகுமரியில் இருந்து கிருஷ்ணகிரி வரை திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: