×

பா.ஜ.வுக்கு தாவ முயன்ற கே.வி.தாமசை சமாதானம் செய்தது காங்கிரஸ்: சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி

திருவனந்தபுரம்: சீட் கிடைக்காததால் பா.ஜ.வுக்கு தாவ முயற்சித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தாமசை காங்கிரஸ் தலைவர்கள் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசி சமரசம்  செய்தனர்.கேரள காங்கிரசில் மூத்த தலைவர்களில் ஒருவர் கே.வி.தாமஸ். 72 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் வார்டு கமிட்டி உறுப்பினர் பதவியில் தொடங்கி, மாவட்ட தலைவர், மாநில பொருளாளர் உட்பட பல பதவிகளை  வகித்துள்ளார். ஒரு முறை எம்.எல்.ஏ. 3 முறை எம்.பி., ஒரு முறை மாநில சுற்றுலா மற்றும் மீன் வளத்துறை அமைச்சர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சர் என பல பதவிகளில் இருந்துள்ளார்.எர்ணாகுளம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1984 முதல் 1996 வரை தொடர்ந்து பதவியில் இருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியை இளைஞர் காங்கிரஸ் தொண்டரான ஹைபி ஈடனுக்கு கொடுக்க  தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கே.வி.தாமஸ் மிரட்டியதை தொடர்ந்து மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் இம்முறை கே.வி.தாமசின் பாச்சா பலிக்கவில்லை. இம்முறை எர்ணாகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஹைபி ஈடனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாஜ.வுக்கு செல்லப்போவதாக  தகவல்கள் வெளியானது.எர்ணாகுளம் தொகுதிக்கு நல்ல ஆள் கிடைக்காமல் பா.ஜ. அலைபாய்ந்து வந்ததால் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் தாமசுக்கு பா.ஜ. வலைவீச தொடங்கியது. விபரீதத்தை உணர்ந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  உடனடியாக தாமசை சந்தித்து சமரசம் பேச உத்தரவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் தாமசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஹைபி ஈடன் வேட்பாளராகி  உள்ளதால் காலியாகும் எர்ணாகுளம் சட்டமன்ற தொகுதி சீ, கேரள காங்கிரஸ் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பொறுப்பு ஆகிய பதவிகள் தருவதாக ஆசை காட்டிய பிறகே  ஒருவழியாக அவர் சமரசம் ஆனார்.இறுதியில் எர்ணாகுளம் தொகுதி வேட்பாளர் ஹைபி ஈடனுக்கு ஆதரவாக தான் பிரசாரம் செய்வேன் என்று தன்னை சந்திக்க வந்த தலைவர்களிடம் தாமஸ் வாக்குறுதியும் அளித்தார். அதன் பிறகே காங்கிரஸ் தலைவர்கள்  நிம்மதியடைந்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : KV Thambi ,BJP ,Disappointment ,Congress , Tried , jump, BJP, The Congress ,access,seat
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...