அமித்ஷா தலைமையிலான பேச்சுவார்த்தையில் முடிவு கோவா புதிய முதல்வர் பிரமோத் சாவந்த்?: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு துணை முதல்வர் பதவி

பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக சபாநாயகர் பிரமோத் சாவந்த் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜ தலைவர் அமித்ஷா தலைமையில்  நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் விஜய் சர்தேசாய், சுதின் தவாலிகருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். ஏற்கனவே தனிப்பெரும்பான்மை பலத்தை இழந்த ஆளும் பாஜ.வுக்கு, பாரிக்கர்  மறைவால் ஆட்சியை தக்க வைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜ எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசா, முதல்வர் பாரிக்கர் இருவரும் அடுத்தடுத்து காலமானதைத் தொடர்ந்து, கோவா சட்டப்பேரவையில் பாஜவின் உறுப்பினர்கள்  எண்ணிக்கை 12 ஆக சரிந்துள்ளது.

அக்கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கோவா முன்னணி, எம்ஜிபி, சுயேச்சைகள் தலா 3 எம்எல்ஏக்களை கொண்டுள்ளன. புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக, பாஜ மூத்த தலைவர் நிதின் கட்கரி நேற்று  முன்தினம் இரவே கோவா விரைந்தார். அவர் தலைமையில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் பனாஜியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை நடந்தது. நீண்ட நேர  ஆலோசனைக்குப் பிறகும் பாஜ-கூட்டணி கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், புதிய முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நிலை நீடித்தது. இதைத்தொடர்ந்து, பாரிக்கரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கோவா  வந்த பாஜ தேசிய தலைவர் அமித்ஷா நேற்று பனாஜி ஓட்டலில் மீண்டும் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், கூட்டணிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு, துணை முதல்வர் பதவியை  வழங்க அமித்ஷா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. பாஜ எம்எல்ஏவும், சபாநாயகருமான பிரசாந்த் சாவந்த் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜ கூட்டணியில் உள்ள கோவா  முன்னணி கட்சி தலைவரும், மாநில அமைச்சருமான விஜய் சர்தேசாய் மற்றும் மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி தலைவர் சுதின் தவாலிகர் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பாஜவின் தனிப்பெரும்பான்மை பலம் குறைந்துவிட்டதால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரி அம்மாநில ஆளுநரிடம் கடந்த வெள்ளிக்கிழமையே கடிதம் கொடுத்துள்ளது. அக்கட்சி தலைவர்கள்,  நேற்று முன்தினமும் ஆளுநரை சந்தித்து பேசிய நிலையில், நேற்று மீண்டும் ஆளுநரிடம் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர். பாரிக்கரின் இறுதி சடங்குகள் நிறைவடைவதற்குள் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்பதில்  காங்கிரஸ் தீவிரமாக இருப்பதால், உடனுக்குடன் புதிய முதல்வரை பதவியேற்க செய்வதிலும் பாஜவும் தீவிரம் காட்டியது.இதனால், நேற்று நள்ளிரவோ அல்லது இன்று காலையிலேயோ புதிய முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உடனடியாக அவர் பதவியேற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாஜ வட்டார தகவல்கள்  கூறின. இதன் காரணமாக கோவா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: