மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

பனாஜி: மறைந்த கோவா முதல்வர் மனோ கர் பாரிக்கரின் உடல், கோவா மிராமர் கடற்கரையில் நேற்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர்(63) கடந்த சில மாதங்களாக கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். டெல்லி, மும்பையில் சிகிச்சை பெற்ற  அவர், அமெரிக்காவில் அறுவை  சிகிச்சை மேற்கொண்டு நாடு திரும்பினார். தொடர் சிகிச்சை பெற்றபடியே அரசுப் பணிகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசமடைந்தது. தலைநகர் பனாஜி அருகேயுள்ள  டோனா பவுலாவில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த பாரிக்கர் நேற்று முன்தினம் மாலை இறந்தார். பாரிக்கரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,  பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல்  தெரிவித்தனர். இவரது மறைவை முன்னிட்டு மத்திய அரசு நேற்று துக்க நாளாக  அனுசரித்தது. தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. கோவாவில் ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

பாரிக்கரின் உடல் அவரது வீட்டிலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் பனாஜியில் உள்ள பா.ஜ அலுவலகத்துக்கு நேற்று காலை எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பா.ஜ தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்  அஞ்சலி செலுத்தினர். அதன்பின் பொதுமக்கள் அஞ்சலிக்காக பாரிக்கரின் உடல் கலா பவன் அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கோவா மக்கள் ஏராளமானோர், பாரிக்கர் உடலுக்கு சோகத்துடன் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை கோவா வந்த பிரதமர் மோடி, பாரிக்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா, பா.ஜ தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ ஆளும் மாநில முதல்வர்கள்,  கோவா அமைச்சர்கள் உட்பட பலர் பாரிக்கர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கலா பவன் அரங்கிலிருந்து நேற்று மாலை 4.30 மணிக்கு பாரிக்கரின் இறுதி யாத்திரை தொடங்கியது. மிராமர் கடற்கரை வரை ஆயிரக்கணக்கான மக்கள் பாரிக்கர் உடல் எடுத்துச் செல்லப்பட்ட ராணுவ வாகனத்தின் பின் அணி  வகுத்து சென்றனர்.

கோவா மாநிலத்தின் முதல் முதல்வர் தயானந்த் பந்தோத்கர் நினைவிடம் அருகே, பாரிக்கர் உடல் நேற்று மாலை 6 மணியளவில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பாரிக்கர் மகன் உத்பல், சிதைக்கு தீ  மூட்டினார். அப்போது கடற்படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

மத்திய அமைச்சரவை இரங்கல்

மறைந்த பாரிக்கருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று காலை கூடியது. அப்போது அமைச்சர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பின் இரங்கல் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. மறைந்த கோவா முதல்வர் பாரிக்கர் மும்பையில் ஐஐடியில் மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். இந்திய வரலாற்றில் ஐஐடியில் படித்துவிட்டு அரசியலுக்கு வந்த முதல் தலைவர் இவர்தான்.  இதனால் அவருக்கு மும்பை ஐஐடியின் சக்சேனா அரங்கத்தில் நேற்று மாலை 5 மணிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஐஐடி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவ சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: