×

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சி பருவமழை பொய்த்ததால் கருகும் பயிர்கள்: பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி ஊற்றும் அவலம்

செய்யாறு:  பருவ மழை பொய்த்ததால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீரின்றி மணிலா மட்டுமின்றி நெற்பயிர்களும் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக நம்பியிருக்கும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். மொத்த மக்கள் தொகையில், 80 சதவீத பேர் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளனர். ஆனால் போதிய மழையின்றி தொடர்ந்து கடும் வறட்சி நிலவிவருவதால் தற்போது விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  இங்கு மொத்தம் 1,856 ஏரிகள் உள்ளன. அதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் 600, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் உள்ள ஏரிகள் 1,256. அனைத்து ஏரிகளும் போதிய மழையின்றி வறண்டு போயுள்ளன.  சுமார் 1.86 லட்சம் விவசாய பாசன கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றதுடன், பெரும்பாலான கிணறுகள் வறண்டு போயுள்ளன. இத்தகைய கடும் வறட்சியால், விவசாயத்ைத மட்டுமே நம்பி வந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சையப்பன் நகரில் மழை மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் மணிலா பயிரிட்டிருந்தனர். எப்படியும் வருண பகவான் கை கொடுப்பான் என்ற நம்பிக்கையில், கிணற்று நீரை நம்பி பயிரிடப்பட்ட மணிலா பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பல ஆயிரம் ஏக்கர் பரப்பிலான மணிலா பயிர் கருகி போயுள்ளது.

திருவண்ணாமலை, செய்யாறு உட்பட பல வட்டாரங்களில் 20  சதவீத விவசாயிகளே நெல், மணிலா, எள், கேழ்வரகு, மிளகாய் பயிர் செய்துள்ளனர். நீரின்றி பயிர்களும் கருகி போயுள்ளன.  நெற்பயிர்களுக்கு பாய்ச்ச கிணற்றில் தண்ணீர் இல்லை. வெயிலின் தாக்கமோ 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. இது மனிதர்களை மட்டுமின்றி கால்நடைகளையும் வாட்டி வரும் நிலையில் நெற்பயிர்களையும் கருக வைத்துள்ளது. குறிப்பாக செய்யாறு அடுத்த செங்கட்டன்குண்டு கிராமத்தில் விவசாயிகள் பலரது வயலில், நெல் பயிர்கள் காய்ந்து வருவதால், கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கு விடுவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலை உள்ளது. சிலர், பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி, டிராக்டர் மூலம் கொண்டு வந்து ஊசலாடும் நெற்பயிருக்கு ஊற்றி காப்பாற்றி வருகின்றனர்.
கடனை வாங்கி பயிர் செய்த விவசாயிகளை, அரசுதான் வஞ்சித்து வந்தது. தற்போது, இயற்கையும் அதன் பங்கிற்கு சோதனை செய்வதால், என்ன செய்வதன்று தெரியாமல் வேதனையில் உள்ளனர். இந்த கடும் வறட்சி தாக்கத்தினால் கடனை எவ்வாறு திரும்ப செலுத்துவது, தங்களின் வாழ்வாதாரம் என்ன ஆகுமோ என விவசாயிகள் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : district ,Thiruvannamalai , Heavy drought , Thiruvannamalai, Cropping,losing, monsoon
× RELATED இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு...