போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மஞ்சூர் அருகே நக்சல்கள் நடமாட்டம்?

மஞ்சூர்:  மஞ்சூர் அருகே கிராமத்திற்குள் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்தது குறித்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.   நீலகிரி மாவட்டம்  மஞ்சூர் அருகே தமிழக எல்லையை ஒட்டிய அட்டப்பாடி, அகளி, முக்காலி உள்ளிட்ட பகுதிகள் கேரளா மாநிலத்திற்குள் அமைந்துள்ளது.  கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் மாவோயிஸ்ட்கள் எளிதில் ஊடுருவ வாய்ப்புள்ளதையடுத்து தமிழக போலீசாரும் எல்லையோர பகுதிகளில் தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பர்பவானி பகுதியில் அதிரடிபடை முகாமும், கிண்ணக்கொரை பகுதியில் நக்சல் ஒழிப்பு சிறப்புபடை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்ட் கிராமத்தில் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் சிலர் நடமாடியுள்ளனர். இவர்களை கண்டு சந்தேகம் அடைந்து பொதுமக்கள் விசாரிக்க சென்றனர். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். இதை தொடர்ந்து பொதுமக்களும் கூச்சலிட்டபடி அவர்களை விரட்டினர். ஆனால் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்படி மஞ்சூர் போலீசார் மெரிலேன்ட் கிராமத்திற்கு சென்று மர்ம நபர்கள் குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கிராமத்திற்குள் ஊடுருவியவர்கள், தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து நக்சல் ஒழிப்பு பிரிவு சிறப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிண்ணக்கொரை முகாமில் இருந்து எஸ்.ஐ. பழனிசாமி தலைமையிலான நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினர் மெரிலேண்ட் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: