பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் 4 நாள் விசாரணை முடிந்தது காமக்கொடூரன் திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக காமகொடூரன் திருநாவுக்கரசின் சிபிசிஐடி போலீஸ் காவல் நிறைவுபெற்றதை தொடர்ந்து அவர் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பொள்ளாச்சி  மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் மகன் திருநாவுக்கரசு (27),  இவரது கூட்டாளிகளான பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஷ் (29),  வசந்தகுமார் (24) ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது  செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த  வழக்கை பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால்,  விசாரணை முழுமையாகவும், முறையாகவும் நடக்காத காரணத்தால் இந்த வழக்கு கடந்த  12ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி ஐ.ஜி  தர் மேற்பார்வையில், எஸ்.பி. நிஷா பார்த்திபன் விசாரணை நடத்தி  வருகிறார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும்  திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில்தான் இக்குற்றச்செயல் நடந்துள்ளது. பாலியல் வீடியோவும் இங்குதான் எடுக்கப்பட்டுள்ளது. கைதான  நான்கு பேரில், திருநாவுக்கரசுதான் முதல் குற்றவாளியாக  சேர்க்கப்பட்டுள்ளார்.  எனவே, இவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க  சிபிசிஐடி போலீசார், கோவை சி.ேஜ.எம் கோர்ட்டில்  கடந்த 14ம்தேதி மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்று, 4 நாள் கஸ்டடி வழங்கி கடந்த 15ம்தேதி நீதிபதி  நாகராஜ் உத்தரவிட்டார். 18ம் ேததி மாலை 4 மணிக்கு மீண்டும் இதே  கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து,  சிபிசிஐடி போலீஸ் எஸ்.பி., நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீசார்  திருநாவுக்கரசுவை ரகசிய இடத்தில்வைத்து  கடந்த நான்கு நாட்களாக விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர். கடந்த 4  நாளில் 9 முறை போலீசார் தங்களது இருப்பிடத்தை மாற்றினர். காரணம்,  திருநாவுக்கரசு மீது பொள்ளாச்சி பகுதி மக்கள் கடும் ஆத்திரத்தில்  இருப்பதால், அவரை சூழ்ந்து தாக்கக்கூடும் எனக்கருதி அடிக்கடி இருப்பிடத்தை  மாற்றினர். திருநாவுக்கரசு கொடுத்த தகவலின் அடிப்படையில், அவரது  பண்ணை வீட்டில் மூன்று முறை சோதனை நடத்தினர். சில ரகசிய இடங்களை குறி  வைத்து, அங்கேயே மீண்டும் மீண்டும் சோதனை நடத்தினர். மெமரி கார்டு,  செல்போன், பென் டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை ைகப்பற்றினர். நேற்று காலை  திருநாவுக்கரசிடம் 4வது நாளாக விசாரணை நடத்திமுடித்த சிபிசிஐடி போலீசார்,  அவரை, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சி.ஜே.எம் கோர்ட் நீதிபதி  வீட்டுக்கு காலை 8 மணிக்கு அழைத்துச்சென்றனர். போலீஸ் கஸ்டடி விசாரணை  முடிவடைந்துவிட்டது எனக்கூறி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். இதை  ஏற்று, திருநாவுக்கரசுவை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி நாகராஜ்  உத்தரவிட்டார். அதன்படி, காலை 8.40 மணிக்கு திருநாவுக்கரசு கோவை மத்திய  சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். மாலை 4 மணி வரை, காலஅவகாசம் இருந்தும், சிபிசிஐடி போலீசார் முன்கூட்டியே திருநாவுக்கரசுவை கோர்ட்டில் ஒப்படைத்துவிட்டனர்.

பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு:  பொள்ளாச்சி  பாலியல் பலாத்கார வழக்கினை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரிக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்து  அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் பொள்ளாச்சியில் இன்று (19ம் தேதி) முழு கடையடைப்பு நடத்துகின்றனர்.  இந்நிலையில் சிலர் வழக்கம் போல கடைகள் திறந்திருக்கும்  என்று சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். அவற்றை வணிகர்கள் நேற்று கிழித்தெறிந்தனர். வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு: தமிழ்நாடு  புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் முடிவின்படி நேற்று பொள்ளாச்சியில்  உள்ள 4 கோர்ட்டுகளில் 30 பெண்கள் உள்பட 250 வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில்  ஈடுபட்டனர். இதனால் கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்கள் எங்கே?

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் கைதான ரிஸ்வந்த் என்கிற  சபரிராஜன் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் போது அதை ரகசியமாக  தனது செல்போனில் பதிவு செய்து கொள்வதும், பின்னர் அதை வைத்து  மாணவிகளிடம் பணம், நகைகளை பறிப்பதும், அவ்வப்போது தனது ஆசைக்கு  இணங்கும்படி தொல்லை கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளான்.தன்னுடைய செல்போனில் ஏராளமான வீடியோ இருப்பதாக நண்பர்களிடம் பெருமையாக பேசி  வந்ததையடுத்து சபரிராஜனின் செல்போனில் இருந்த வீடியோக்களை திருநாவுக்கரசு,  சதீஸ், பார் நாகராஜ் ஆகிய மூவரும் மிரட்டி பறித்துக்கொண்டனர். இதை ஏற்கனவே  வீடியோ ஒன்றில் திருநாவுக்கரசு ஒப்புக்கொண்ட நிலையில், சிபிசிஐடி  விசாரணையிலும் இதை வாக்குமூலமாக கூறி உள்ளார்.

மேலும்  கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்களை ஏற்கனவே போலீசார் பறிமுதல்  செய்துள்ள நிலையில், வீடியோக்களை வைத்துள்ளதாக கூறப்படும் பார் நாகராஜின்  செல்போன்களை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் சிபிசிஐடி போலீசாருக்கு  எழுந்துள்ளது. மேலும் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில்  வெளிவந்துள்ள பாபு, செந்தில், வசந்த்குமார் மற்றும் தலைமறைவாக உள்ள  மணிவண்ணன் என்கிற மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தவும் சிபிசிஐடி  போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து பார் நாகராஜ் உள்ளிட்ட 4  பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி விரைவில் சம்மன் அனுப்ப சிபிசிஐடி  போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அலறல் கேட்காமல் இருக்க வீட்டில் நவீன கண்ணாடி

பெண்களை அழைத்துச் செல்வதற்கு வசதியாக திருநாவுக்கரசு தனது காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். இதை விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பண்ணை வீட்டின் ஜன்னல்களில் அக்வாஸ்டிக் என்னும் நவீன கண்ணாடி பொருத்தியுள்ளார். உள்ளே இருந்து யார் கூச்சல் போட்டாலும் வெளியே கேட்காத வகையில் இந்த கண்ணாடி பொருத்தியுள்ளார். இதையும், நான்காவது நாள் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.  தனது பாலியல் தொழில் பற்றி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதால் மிகவும் முன்னெச்சரிக்கையாக இப்படி செயல்பட்டுள்ளார். இது, கடந்த நான்கு நாட்களாக நடந்த சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவிகள் தற்கொலை வழக்கு மீண்டும் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் கும்பலின் டார்ச்சர் தாங்காமல் கடந்த 7 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர்  தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுகிறது. எனவே கடந்த 7 ஆண்டுகளில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவிகளின் வழக்கை  மீண்டும் விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து,  பொள்ளாச்சி போலீஸ் சப்.டிவிசன்,  வால்பாறை சப்.டிவிசனுக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் கடந்த 7  ஆண்டுகளில் பதிவான தற்கொலை வழக்குகளில், குறிப்பாக பள்ளி, கல்லூரி  மாணவிகளின் வழக்கினை விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி மாவட்ட  காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தனிப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: