நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரன்ட்

புதுடெல்லி: லண்டனில் பதுங்கியுள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து ரூ.13 ஆயிரம் கோடி வரை கடன் பெற்ற தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவர்களை நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள நீரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் மூலமாக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதோடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடிக்கு சொந்தமான ₹892 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

நீரவ் மோடி லண்டனில் பதுங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் ஆதாரப்பூர்வமாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நீரவ் மோடி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ ஆதாரங்கள் சமீபத்தில் வெளியாகின  இவர் லண்டனின் மேற்கு பகுதியில் சென்டர் பாய்ன்ட் டவர் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 3 படுக்கை அறை கொண்ட இவரது வீட்டுக்கு மாத வாடகை 15 லட்சம். இவரை இங்கிலாந்தின் ‘டெலிகிராப்’ பத்திரிகை நிருபர் அடையாளம் கண்டு அவரிடம், சில கேள்விகள் கேட்டார். இங்கிலாந்து அரசிடம் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.  ஆனால் அதற்கு நீரவ் மோடி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதை தொடர்ந்து, நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரும் மனுவை லண்டன் நீதிமன்றத்துக்கு அனுப்பும்படி இங்கிலாந்து உள்துறையிடம் அளித்துள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறையும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை வேண்டுகோளை ஏற்று, நீரவ் மோடியை கைது செய்ய பிடிவாரன்ட் உத்தரவை லண்டன் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக, மத்திய அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டாலும், லண்டனில் இருந்து விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு பிறப்பித்தும் அதை செயல்படுத்த இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: