ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் மேலும் உயருமா?

புதுடெல்லி: வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏடிஎம்கள்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.  இதற்கு காரணம், வங்கிகள் ஏடிஎம் பயன்பாட்டுக்கென சம்பந்தப்பட்ட வங்கிகள் பணம் தர வேண்டும். ஒயிட் லேபிள் ஏடிஎம் எனப்படும் வங்கி சாராத ஏடிஎம் சேவை நிறுவனங்கள் இந்த கட்டணத்தை நம்பியே இருக்கின்றன. தற்போது ஏடிஎம் நிறுவியுள்ள நிறுவனத்துக்கு கட்டணமாக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் 15 ரூபாய் வழங்க வேண்டும்.  இந்த கட்டணத்தை தேசிய பண பரிவர்த்தனை கழகம் நிர்ணயிக்கிறது. இந்த நிலையில், தற்போது உள்ள கட்டணத்தை மேலும் ₹1.5 முதல் ₹2 உயர்த்த வேண்டும் என ஏடிஎம் நிறுவனங்கள் கோரியுள்ளன. இதுதொடர்பாக வங்கிகள் மட்டும் ஏடிஎம் நிறுவியுள்ள மற்றும் நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடந்து வருகிறது.

  மேற்கண்ட பரிவர்த்தனை கட்டணத்தை 17 ரூபாயாக அதிகரிக்கலாம் என தேசிய பண பரிவர்த்தனை கழகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையால் தடுமாறி வரும் வங்கிகள் இந்த கட்டணத்தை உயர்த்துவதை விரும்பவில்லை.

  ஏடிஎம்கள் பராமரிப்பு மற்றும் பணத்தை எடுத்துச்சென்று நிரப்புவது போன்ற பணிகளுக்கு தற்போது வழங்கப்படும் கட்டணம் போதுமானதாக இல்லை என்று ஏடிஎம் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் சுமார் 2.38 லட்சம் ஏடிஎம்களில் 50 சதவீத ஏடிஎம்கள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.  குறிப்பாக, பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு ஏடிஎம்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதில் 15,000 ஒயிட் லேபிள் ஏடிஎம்களும் அடங்கும். ரிசர்வ் வங்கி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் ஏடிஎம் பராமரிப்பு செலவுகள் மேலும் உயர்ந்து விட்டது.  எனவே, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஏடிஎம் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.  சில வங்கிகள் இலவச பரிவர்த்தனை போக, கூடுதல் பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் 18 சதவீத ஜிஎஸ்டியுடன் சேர்த்து 24 ரூபாய் வரை வங்கிகள் வசூல் செய்கின்றன. வங்கிகள் ஏடிஎம் நிறுவனங்களுக்கு வழங்கும் கட்டணம் உயர்ந்தால் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கட்டணம் உயரும் அபாயம் உள்ளது. அதேநேரத்தில், வாடிக்கையாளர்கள் பாதிக்காத வகையில் இந்த முடிவை செயல்படுத்த வேண்டும் என ஏடிஎம் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: