இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டோம் டிடிவி தினகரனுக்கு ‘பெப்பே’ 3 மாஜி எம்.எல்.ஏக்கள் ‘எஸ்கேப்’: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் 22ல் வெளியீடு?

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக, அதிமுக தங்களின் வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், அமமுகவில் 24 நாடாளுமன்ற மற்றும் 9 சட்டமன்ற  இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டார். இதில், 9 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பட்டியலில் தகுதி  நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களே  போட்டியிடுவார்கள் என்று  கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில், 18 தொகுதிகளில் மீதம் உள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்வதில் டிடிவி.தினகரனுக்கு தொடர் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. 9 பேர் டிடிவி.தினகரனின் பேச்சை கேட்டதால் அவர்களின்  பட்டியல் மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 9 பேரும் தங்களிடம் பணம் இல்லை. தேர்தலில் செலவு செய்ய பணம் முக்கியம். எனவே, கட்சி தான் பணச்செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிடிவி.தினகரனிடம் கூறிவந்தனர். இந்தநிலையில் கடந்த சில  தினங்களுக்கு முன்பு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த தினகரன், மாஜிக்களின் நிலைகளை எடுத்துக்கூறியுள்ளார்.

அப்போது, விவேக் ஜெயராமனிடம் பேசி தேர்தல் செலவிற்கு ஏற்பாடு செய்வதாகவும் சசிகலா கூறியதாக தகவல்கள் தெரிவித்தன. இந்தநிலையில், 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த 3 மாஜி எம்.எல்.ஏக்கள்  இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என தினகரனிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அமமுக வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:தேர்தலில் செலவு செய்ய பணம் முக்கியம். இடைத்தேர்தல் வந்தால் கட்சி சார்பில் செலவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறிவந்த தினகரன் திடீரென அதில்  இருந்து பின் வாங்கினார். இதனால், அதிருப்தி அடைந்துள்ள 3 மாஜி எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டிட மாட்டோம் என தினகரனிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் டிடிவி.தினகரன்  இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தன. மேலும், 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அப்போது, இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் இருக்கும் எனவும் அமமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

எடப்பாடியை முதல்வாராக்கியே தீருவேன் அமமுக வேட்பாளர் சூளுரை

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் எதிர்கோட்டை சுப்ரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், நேற்று சாத்தூர் தொகுதியில் அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அப்போது, பிரச்சாரத்தின்  நடுவே நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘மக்கள் கண்டிப்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக இருக்கிற என்னை  வெற்றிபெற செய்வார்கள். இது நிச்சயம் நடக்கும். தமிழகத்தில் முதலமைச்சராக   இருக்கின்ற அண்ணன் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்பதற்காக  நடக்கிற தேர்தல் இது. கண்டிப்பாக வெற்றிபெறுவேன் என்பதை மட்டும்  உங்களிடத்தில் மிகத்தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்’ என  கூறினார். சமூக வளைதளங்களில் இவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: