போக்குவரத்து விதி மீறல் கர்நாடக முதல்வரின் வாகனத்துக்கு 400 அபராதம்: நவீன கேமரா பாரபட்சமின்றி செயல்பாடு

பெங்களூரு: முதல்வர் குமாரசாமியின் வாகனம், 2 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் 400 அபராதமாக செலுத்தும்படி போக்குவரத்து போலீசார் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களை கண்காணிப்பதற்கு ஆங்காங்கே நவீனத்துவத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் சிக்னல் ஜம்ப்பிங், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம்  ஓட்டுவது உள்பட பல்வேறு விதிமுறை மீறல்களை படம்பிடித்து போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைத்துவிடும். மேலும், விதிமுறை மீறலை படம் பிடித்த கையோடு அந்த வாகனம் யாருடையது, அவரது முகவரி ஆகிய விவரங்களையும் போலீசாருக்கு பிழையில்லாமல் கொடுத்துவிடும். இந்த நவீனத்துவம் போலீசாருக்கு மிகவும்  உதவிகரமாக உள்ளது.  இந்த கேமராவில் தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமியே சிக்கியுள்ளார். கடந்த பிப்.10ம் தேதி முதல்வர் குமாரசாமி பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்துவதில் தீவிரமாக இருந்தார். அப்போது வாகனத்தில் அங்கும், இங்கும்  சென்று கொண்டிருந்தார்.

அதேபோன்று பிப்.22ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர், பெங்களூரு விதான சவுதாவில் சந்தித்து பேசுவதற்காக சென்றிருந்தார். இந்த 2 நாட்களும் முதல்வர் குமாரசாமி தனது சொந்த வாகனத்திலேயே சென்றார். வழக்கமாக  ஓட்டும் டிரைவர்தான் அந்த வாகனத்தையும் ஓட்டிச் சென்றார். முதல்வர் வழக்கம்போல முன் இருக்கையில் அமர்ந்து பயணித்தார்.இந்த 2 நாட்களில்தான் பிப்.10ம் தேதி வாகன டிரைவர் செல்போன் பேசியபடி காரை ஓட்டிச் சென்றுள்ளார். பிப்.22ம் தேதி அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இந்த காட்சிகளை போக்குவரத்து விதிமுறை மீறலை  படம்பிடிக்கும் கேமராக்கள் பதிவு செய்துள்ளன. அரசு வாகனம் என்றால் போலீசார் முன்கூட்டியே அறிந்து விதிமீறல் நோட்டீசை தடை செய்திருப்பார்கள். ஆனால் முதல்வர் பயணித்தது அவரது சொந்த வாகனம் என்பதால் போலீசாரால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள  முடியாமல் போய்விட்டது. வழக்கம்போல முதல்வர் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பட்டு விட்டது.நோட்டீஸ் சென்ற பின்னர் யாராக இருந்தாலும் அபராத தொகை கட்ட வேண்டியது கட்டாயம். ஆனால் இந்த 2 நோட்டீசிற்கும் இதுவரை முதல்வர் தரப்பில் இருந்தோ, அவரது அலுவலக தரப்பில் இருந்தோ அபராத தொகை  செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பொறி வைத்து பிடிப்பதற்காக நவீன கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ள நிலையில், மாநில முதல்வரின் வாகனமே சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: