காங்கிரஸ் அரசின் சாதனையை பாஜவால் முறியடிக்க முடியாது: ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு

கல்புர்கி: ‘‘நாட்டில் 48 ஆண்டுகால காங்கிரஸ் அரசின் சாதனையை பாஜவால் முறியடிக்க முடியாது’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக இரண்டாம் கட்டமாக பிரசாரத்தை தொடங்கியுள்ள ராகுல்காந்தி நேற்று ஐதராபாத் - கர்நாடகா மற்றும் வடகர்நாடக பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கர்நாடக  மாநிலம் கல்புர்கி மாநகரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

 மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகளில் மக்களுக்கு பயன்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக  அனைவருக்கும் கல்வி, கல்வி உரிமை சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. வறட்சியால் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உணவுக்கு வேலை,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம், ஜவஹர்லால் நேரு நகர மேம்பாட்டு திட்டம், ஏழைகளுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் உள்பட பல திட்டங்கள்  செயல்படுத்தினோம்.  விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பலனடையும் பல திட்டங்கள்  செயல்படுத்தியதுடன், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தோம். ‘மத்தியில் 50 ஆண்டுகள் காங்கிரஸ் நடத்திய ஆட்சியையும்  எனது தலைமையிலான 58 மாத ஆட்சியையும் எடை போட்டு பாருங்கள்’ என்று சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுள்ளார். இதை மக்களிடம் கேட்பதற்கு பதிலாக முதலில் அவரது மனசாட்சியிடம்  கேட்டிருக்க வேண்டும். 48 ஆண்டுகால காங்கிரஸ் அரசின் சாதனையை பாஜவால் முறியடிக்கவே முடியாது.

அவர் இவ்வளவு சுதந்திரமாக நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறாரே அதற்கான பாதுகாப்பை உறுதி செய்தது காங்கிரஸ் அரசு. வெளிநாடுகளுடனான நட்புறவை பேணி காத்தோம். கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழில்  வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதி, அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச தரத்திலான விமான நிலையம், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்த வசதியாக பல லட்சம் கோடி செலவில் ரயில் திட்டங்கள், சாலை  மேம்பாடு, வேளாண் தொழிலுக்கு சர்வதேச முதலீடு பெறுதல், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், பொதுதுறை நிறுவனங்கள் புனரமைப்பு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். இப்படி காங்கிரஸ்  ஆட்சியின் சாதனைகளை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம்.  ஆனால் 58 மாத கால மோடி ஆட்சியில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். புது திட்டம் என்ற பெயரில் மக்களை பாதிக்கும் திட்டங்களை தான் மோடி அரசு  செயல்படுத்துகிறது. காங்கிரஸ் ஆட்சியுடன் மோடி ஆட்சியை எப்படி ஒப்பிட்டு பார்க்க முடியும்?.பிரதமர் மோடி தன்னை சவுக்கிதார் (காவலர்) என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார். தன்னை காவலர் என்று கூறிகொண்டு ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டு பணக்காரர்களின் நலனுக்காக திட்டம் செயல்படுத்தி  வருகிறார். மோடியின் தவறான தொழில் கொள்கையால் நாட்டில் சிறு தொழிற்சாலைகள்  மூடுவிழா கண்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். அனில் அம்பானி, நீராவ்மோடி போன்றவர்கள் தான் மோடி  ஆட்சியில் பலனடைந்துள்ளார்களே தவிர ஏழைகள், விவசாயிகள் பயனடையவில்லை.

பண மதிப்பிழப்பு சட்டம் கொண்டு வந்ததால் நாட்டின் பொருளாதார நிலை அதளபாதளத்தில் விழுந்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியுள்ளதின் மூலம் கப்பர்சிங் வரியை நடைமுறைப்படுத்தியுள்ளார். மத்தியில் காங்கிரஸ்  தலைமையிலான ஆட்சி அமைந்தால் ஒரே சீரான ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்.மேடைகளில் வீர ஆவேசமாக மோடி பேசுவதால் ஏதோ சாதித்து விட்டதுபோல் பாவனை காட்டுகிறார். பேசுவதால் எதையும் சாதிக்க முடியாது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் வாங்கியுள்ள கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.  கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு வழிகளில் ஊழல் செய்துவிட்டு சாகும்போது சங்கரா என்று வேண்டுவது போல், ஆட்சி காலம் முடியும்போது லோக்பால் அமைப்புக்கு தலைவர் நியமனம் செய்வது என்ன நியாயம்? இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: