மாஞ்சோலை பாலத்தை உடனே சீரமைக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: தோட்ட தொழிலாளர்கள் முடிவு

அம்பை: மேற்குதொடர்ச்சி மலை மாஞ்சோலை மலை பிரதேசத்தில் அனைத்து தோட்டத்தொழிலாளர் தொழிற்சங்க கூட்டம் மாஞ்சோலை திமுக  தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்தது. வழக்கறிஞர் பாலச்சந்தர் தலைமை வகித்தார். ஐஎன்டியுசி மாவட்ட இணை பொதுச்செயலர் ராமலிங்கம், சார்லஸ், அதிமுக தோட்டச்செயலர் சரவணமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இருதயராஜ் வரவேற்றார். கூட்டத்தில், மாஞ்சோலை மலை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதில் நாலுமுக்கு, ஊத்து பகுதியில் வசித்து வருபவர்கள், அவர்கள் குடும்பத்திலுள்ள மாணவர்கள், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அனைவரும் பள்ளி, கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு அத்யாவசிய தேவைகளுக்கு அரசு பேருந்தில் சென்று வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியின் ஆற்றை கடக்க கடந்த 1942ம் ஆண்டு அக். 21ம் தேதி அமைக்கப்பட்ட மரப்பாலம் வலு விழந்ததால் அதில் இரும்பு தகடால் பாலம் அமைத்து தருவதாக கூறிய வனத்துறை கடந்த பிப். 1ம்தேதி அந்த பாலத்தை பிரித்து சீரமைக்கும் பணயில் ஈடுபட்டது. ஆனால் பணியில் சுணக்கம் காட்டி வருகிறது. எனவே பாலம் சீரமைக்கும் பணியில்  காலம் கடத்தாது மனித உரிமை ஆணையத்தின் முன் உறுதி அளித்தபடி வனத்துறை மார்ச் 31க்குள் இரும்பு பாலப்பணியை முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காத பட்சத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜெயபால், அற்புதமணி, ஜோதிராஜன், விஜயகுமார், ஸ்ரீகுமார், நாராயணன், சுடலை, மனோகரன், மாரிமுத்து, தேவதாஸ், செல்வரத்தினம், செல்லத்தாய், மதியழகன், முருகம்மாள், வரதராஜ், பேச்சிமுத்து, ராஜன் உள்ளிட்ட 5 டிவிசனை சேர்ந்த தோட்டத்தொழிலார்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: