பொள்ளாச்சி வழக்கில் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட திருநாவுக்கரசு இன்று மீண்டும் மத்திய சிறையில் அடைப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி திருநாவுக்கரசு 4 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 4 நாள் காவல் முடிந்ததால் நீதிபதி நாகராஜ் வீட்டில் திருநாவுக்கரசு ஆஜர் படுத்தப்பட்டார். எனினும், 4 நாட்கள் கால அவகாசம் இன்று மாலை வரை இருந்தும், அதற்கு முன்னதாகவே நீதிபதி வீட்டில் திருநாவுக்கரசுவை ஆஜர் படுத்தினர். அப்போது திருநாவுக்கரசை நாளை வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகராஜன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அவர் மீண்டும் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் இடையே பெரிய அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதையடுத்து, திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்து அரசாணையை வெளியிட்டது. இருப்பினும் சிபிஐ வசம் வழக்கு விசாரணை மாற்றப்படும் முன், சிபிசிஐடி போலீசார் தங்களது தரப்பு விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக திருநாவுக்கரசின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், அவரது உறவினர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து, பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளபட்டது. பின்னர் அங்கிருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை பாதுகாப்பு கருதி வீடியோ கான்பரன்சிங் மூலம் கோவை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது  சிபிசிஐடி போலீசாரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை காலை வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 8 மணி அளவில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி நாகராஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்பு சிறையில் அடைக்கப்பட்டார். எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் 4 நாட்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சபரிராஜன் மிக முக்கிய குற்றவாளியாக கருதப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: