போலி என்கவுன்டரில் பலியானவர் குடும்பத்துக்கு அரசு 10 லட்சம் வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடு மற்றும் வழக்கை முறையாக விசாரிக்காத சிபிசிஐடி இன்ஸ்பெக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் பாண்டியன் நகர் தங்கமணி காலனியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் கடந்த 2009ம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்வுன்டர் என்ற பெயரில் தனது கணவரை அப்போது இருந்த சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் காமராஜ், சிவா, கருணாகரன் ஆகியோர் சுட்டுக்கொன்றதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுந்தரமூர்த்தியின் மனைவி வசந்தி மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை வைத்து பார்க்கும்போது என்கவுன்டர் என்ற பெயரில் மனுதாரரின் கணவர் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மீதும் குற்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை நியாயமாக நடக்க அவர்கள் 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். மேலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இந்த என்கவுன்டர் வழக்கை முறையாக விசாரிக்காத சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டருக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை செயல்பாட்டால் நிகழும் மரணங்கள் தொடர்பாக உடனடியாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மதுரை அரசு மருத்துவமனையில்...