பொள்ளாச்சி சம்பவத்தில் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் மறியல்: உடுமலையில் மாணவிகள் போராட்டத்தால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

உடுமலை: பெண்கள் பாலியல் சம்பவத்தில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கேட்டும், தொடர்புடைய குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரியும், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் 3,000 பேர் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 8.30 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  ‘பொள்ளாச்சி அப்பாவி பெண்கள் சீரழிக்கப்பட்ட வழக்கில் வேண்டும் வேண்டும், நீதி வேண்டும்! பொறுப்பற்ற ஆட்சி! பொள்ளாச்சியே சாட்சி!, வராதே வராதே, ஓட்டு கேட்க வராதே! என கோஷமிட்னர்.
மாணவிகளின் போராட்டம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்து இருபுறமும் வாகனங்கள் பல கிமீ தூரம் அணிவகுத்து நின்றன. பல வாகனங்கள் மாற்றுப் பாதை வழியாக சென்றன. பிறகு அங்கிருந்து சுமார் 1 கிமீ பேரணியாக உடுமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்பு வந்த மாணவிகள் அங்கேயே மறியலில் ஈடுபட்டனர். இதனால் நகரில் கடும் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது.  நீதி கேட்டு போராட்டம் நடத்திய மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர்.இதையடுத்து போலீஸ் அதிகாரிகள், கல்லூரி தாளாளர், கல்லூரி முதல்வர் ஆகிேயார் வந்து மாணவிகளிடம் பேச்சுநடத்தினர். இதையடுத்து பகல் 12.30 மணியளவில் மாணவிகள் மறியலை கைவிட்டனர். முன்னதாக மாணவி ஒருவர் மயங்கி விழுந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மறியல் பற்றி  தகவல் பரவாமல் தடுக்க அப்பகுதியில் ஜாமர் கருவி வைக்கப்பட்டு செல்போன் இணைப்புகள் முடக்கப்பட்டன.

எஸ்.பி.யை மாற்ற கோரிக்கை: பொள்ளாச்சி  பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட மாவட்ட  கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள்  சுமார் 200 பேர் வகுப்புகளை புறக்கணித்து  கல்லூரி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது,  மாணவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பெண் குறித்த  தகவலை ரகசியமாக வைத்திருக்காத கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனை உடனடியாக  இடமாற்றம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட  பெண்ணின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்றனர்.கல்லூரிகளுக்கு திடீர் விடுமுறை:  இதனிடையே, மாணவர்கள் போராட்டம் தீவிரமடையலாம் என்பதால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுமார்  10 தனியார் கல்லூரிகளுக்கு திடீரென விடுமுறை அளிக்கப்பட்டது. இதுதெரியாமல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திரும்பி சென்றனர். மேலும், போராட்டம் நடந்தால் அதனை ஒடுக்குவதற்காக நூற்றுக்கணக்கான போலீசார்  பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை, தஞ்சை, புதுகை: பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நாகை மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஜோதிபாசு தலைமையில் நாகை பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சையில், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மன்னர் கல்லூரி உட்பட தமிழகம் முழுதும் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துஆர்ப்பாட்டம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கலை கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இன்ஸ்பெக்டர் மிரட்டல்
பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை  புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆபாச இணையதளங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  பின்னர், அதிமுக  அரசுக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையன் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பக்கூடாது என மிரட்டினார். இதற்கு மாணவர்கள் நாங்கள் அப்படிதான்  கோஷம் எழுப்புவோம். உங்களை கல்லூரிக்குள் வர யார் அனுமதித்தது என கேள்வி எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  
ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரியில் மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பெருந்துறை ரோட்டில் திரண்டு  திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உருவப்படத்தை எரித்தனர். 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் எனக்கோரி திண்டல் முருகன் கோயில் பஸ் ஸ்டாப் அருகே தர்ணாவில் ஈடுபட்டனர். ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வால்பாறை கல்லூரி, திருப்பூர் சிக்கண்ணா கலை அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட  மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

வீடியோ பெண்கள் குறித்து
சிபிசிஐடி விசாரணை
சபரிராஜன்  கும்பலில் பழகிய இளம்பெண்கள், மாணவிகள் வீடியோ விவகாரத்தால்  பீதியடைந்துள்ளனர். தங்களது முகத்துடன் கூடிய வீடியோ வந்து விடுமோ என்ற  அச்சத்தில் உள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் சபரிராஜன் கும்பலிடம் கைப்பற்றிய வீடியோவில் உள்ள பெண்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என  விசாரித்து வருகின்றனர். குறிப்பாக சதீசுடன் இருக்கும் பெண், சபரிராஜனிடம்  ‘லெக்கிங்ஸ்’ அணிந்து கதறி அழும் இரு இளம்பெண்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

போட்டோவில் மயங்கியவர்கள் நேரில் பார்த்ததும் வெறுத்தனர்
சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஆதாரம் இருப்பதாக கூறி போலீசார் கைது செய்தனர். ஆனால் பார் நாகராஜ் உள்ளிட்டோர் மீது ஆதாரமில்லை என போலீசார் மறுத்துள்ளனர். சபரிராஜன்,  திருநாவுக்கரசு உள்ளிட்டோருக்கு அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகரின் மகனின் நெருங்கிய நட்பு இருக்கிறது. கைதானவர்களிடமிருந்த செல்போன்,  லேப்டாப், கம்ப்யூட்டர்களில் பிரமுகரின் மகன் போட்டோ நீக்கப்பட்டிருப்பதாக  தெரிகிறது. திருநாவுக்கரசின் பேஸ்புக்கில் 3 படங்கள் மட்டுமே இருக்கிறது.  இதர படங்களை போலீசார் நீக்கியுள்ளனர். திருநாவுக்கரசு தனது நண்பர்களின்  பெயர்களுடன் ‘மாப்ள’ என்ற அடைமொழி சேர்த்து செல்போனில் பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.

பேஸ்புக்கிலும் ‘மாப்ள’ நண்பர்கள் ஏராளமாக  இருந்துள்ளனர். இதில் ‘கேளிக்கை பார்ட்டி’ படங்கள் அதிகளவு பதிவாகியிருந்து  நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் போட்டோக்கள் முற்றிலும்  நீக்கப்பட்டிருந்தது. வழக்கில் தொடர்புடைய ரிஸ்வந்த் என்ற சபரிராஜனின் பேஸ்புக் முற்றிலும்  முடக்கப்பட்டது. இவரிடம் ஏமாந்த பெண்கள், மாணவிகளுக்கு சபரிராஜன் என்ற பெயர் தெரியாது. ரிஸ்வந்த் என்ற பெயரை சொல்லி பழகிய இவர், தனது 19 வயது  போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவிட்டு மாணவிகளை மடக்கியுள்ளார். போட்டோவில்  அவரின் தோற்றம் பார்த்து மயங்கி பழகிய சிலர், நேரில் பார்த்த பின்னர்  தோற்றம் மாறியதை பார்த்து பழக மறுத்து விட்டதாக தெரிகிறது. அவர்களை மிரட்ட  ‘வீடியோ பதிவு’ திட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பொள்ளாச்சியில் மற்றொரு அதிர்ச்சி...