மக்களவை தேர்தல் கேரளாவில் வேட்பாளர்களை அறிவிப்பதில் பா.ஜ.வில் குழப்பம்

திருவனந்தபுரம்:  கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் இதுவரை எந்த தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.காங்கிரஸ் கூட்டணியிலுள்ள முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் (எம்), புரட்சி சோஷலிஸ்ட் (ஆர்.எஸ்.பி) ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று திருச்சூர்,  கண்ணூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டது காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.  தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பே இடது சாரி கூட்டணி தங்களது  20 தொகுதி வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. இதில் சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. கட்சிகளை சேர்ந்த தலா 6 தற்போதைய எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் போட்டியிடுகின்றனர்.

மற்ற கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும்போது பா.ஜ.க. கூட்டணியில் மந்த நிலையே காணப்படுகிறது.  இதுவரை கேரளாவில் பாஜ ஒரு மக்களவை தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும்  இம்முறை 6 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அமித்ஷா கண்டிப்புடன் கூறியுள்ளார். திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் காசர்கோடு தொகுதிகளைத் தான் பா.ஜ.  குறிவைக்கிறது.  ஆனால் இதுவரை வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படாதது கட்சி தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடாததற்கு பா.ஜ.க.வில் நிலவும்  கோஷ்டிப் பூசல் தான் காரணம் என கூறப்படுகிறது. மாநில தலைவர் தரன் பிள்ளை, பொது செயலாளர் சுரேந்திரன், முரளீதரன் எம்.பி. ஆகியோர் தலைமையில் நிலவி வரும் கோஷ்டிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தில்  இருப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மேலிடத்திற்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.கூட்டணியிலுள்ள பி.டி.ஜே.எஸ். கட்சி தங்களுக்கு 5  தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் 8,039 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்