எம்ஜிஆரிடம் கார் டிரைவராக பணியாற்றியவர் சாலையில் வீசப்பட்ட 80 வயது முதியவர் சாவு: சடலத்தை வாங்க மகன்கள் மறுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சாலையில் வீசப்பட்ட 80 வயது முதியவர் உயிரிழந்த தகவல் தெரிவித்தும் மகன்கள் சடலத்தை வாங்க மறுத்ததால் போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அடக்கம் செய்தனர். இவர்   எம்ஜிஆரிடம் கார் டிரைவராக பணி செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வீரபத்திர முதலியார் நகராட்சி பூங்கா நடைபாதையில்  முதியவர் ஒருவர் கடந்த 20 நாட்களாக அனாதையாக படுத்திருந்தார்‌. சுட்டெரிக்கும் வெயிலிலும் அந்த முதியவர் அங்கேயே மயங்கி  கிடந்தார். விசாரணையில், அவர் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த பாஸ்கரன்(80). இவரது மனைவி குப்பம்மாள். இவர்களுக்கு ஒரு மகள், 4 மகன்கள் இருப்பதும்,  மகன்கள் கவனிக்காமல் சாலையில் வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது.இதுகுறித்து, அவரது மகன்களுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் யாரும் வந்து மீட்டு செல்லாமல் உதாசீனப்படுத்தி பேசியுள்ளனர். மேலும், தங்களது தந்தை எம்ஜிஆரிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்ததாக  தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் முதியவர் பாஸ்கரனின் உடல்நிலை மிகவும் மோசமானது. உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியினர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக  இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் சென்னையில் உள்ள அவரது மகன்களுக்கும், பெங்களூருவில் உள்ள மகளுக்கும் தகவல் தெரிவித்து இரண்டு நாட்களில் சடலத்தை பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்தனர்.ஆனால் அவர்கள், நாங்கள் வரமாட்டோம். எங்களை விட்டுவிடுங்கள். எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். நாங்கள் திருமணமானதிலிருந்தே தனித்தனியாக வந்துவிட்டோம். அவர் தனியாகத்தான் இருந்து வந்தார் என்றனர்.தந்தை இறந்த செய்தி கேட்டும் சிறிதும் கவலைப்படாத கல்நெஞ்சம் படைத்த இவர்களிடம் போனில் போலீசார் உங்களுக்கும் ஒருநாள் இதேப்போல் நிலை ஏற்படும் எனக்கூறியுள்ளனர். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தனது சொந்த செலவில் தர்மபுரி துப்புரவு ஊழியர்கள் மூலம் முதியவரின் சடலத்தை அங்கேயே நேற்று காலை அடக்கம் செய்தார். பெற்ற தந்தையை கைவிட்ட மகன்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று திருப்பத்தூர் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காரைக்காலில் முதியவரிடம் செல்போன் பறித்துசென்ற 2 பேர் கைது