பிரசாரம், பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை: வாகனங்களில் மக்களை அழைத்து வரக்கூடாது

* அரசியல் கட்சிகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மதுரை: தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, பிளக்ஸ், விளம்பர பேனர்கள், கட்-அவுட் வைக்க தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த வக்கீல் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: 2014 நாடாளுமன்ற தேர்தலில் பணம் தொடர்பாக 3,742 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.27 கோடியே 93 லட்சத்து 42 ஆயிரத்தை கைப்பற்றினர். ஒவ்வொரு தேர்தலின்போதும் பணம் கொடுப்பது, வாங்குவது தொடர்பாக சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிகளவில் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களை விளம்பரப்படுத்த வேண்டும். அரசியல் கட்சியினர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ, சாலைகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பிளக்ஸ் போர்டு, பேனர்கள் கட்-அவுட் வைக்க தடை விதிக்க வேண்டும். பணம் விநியோகம் சம்பந்தமாக புகார் பெறப்பட்டு, ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டாலோ அல்லது ஒத்தி வைக்கப்பட்டாலோ அதற்கு காரணமான கட்சியிடம் இருந்து தேர்தல் செலவு பணத்தை திரும்ப பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சியினர் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தொடர்பாக பிளக்ஸ், கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை விதித்தனர். மேலும் பிரசார கூட்டங்களுக்கு பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் அதிகளவில் மக்களை அழைத்து வர தடைவிதித்தனர். மேலும் இவ்வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞரை அழைத்து, தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவுகளை யாரும் பின்பற்றுவதில்லை. இன்று (நேற்று) பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கண்டிப்பாக தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, மனு  குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க வேண்டும் என  கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

* நீதிமன்றம் பல்வேறு உத்தரவு பிறப்பித்தாலும் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.
* உத்தரவை கண்டிப்பாக தேர்தல் ஆணையம்  நடைமுறைப்படுத்த வேண்டும்.
* அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு பதிலளிக்க  வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கருங்குளம் ஒன்றிய பகுதியில் தீவிர பிரசாரம் குளங்கள் தூர்வார நடவடிக்கை