பொள்ளாச்சி விவகாரம்: குற்றவாளிகளை காப்பாற்ற அரசு கபடநாடகத்தை தொடர்கிறது... ஸ்டாலின் கண்டனம்

சென்னை : சி.பி.ஐ. விசாரணைக்கான அரசாணையில் புகார் தந்த பெண் பெயரை குறிப்பிட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்தையே குலை நடுங்கச் செய்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை நேற்று முன்தினம் பிற்பகல் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இவ்வழக்கால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் காணப்பட்டது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே ஜோதிநகர் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த சபரிராஜன் என்பவர், பேஸ்புக் நண்பராக பழகி வந்த ஒரு கல்லூரி மாணவியை தனியாக வரவழைத்து, நண்பர் உதவியுடன் ஆபாசமாக படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், திருநாவுக்கரசு நண்பர்கள் சதீஸ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேர் நீதிமன்ற காவலில் உள்ள சூழ்நிலையில், இதில் 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் காவல் நீடிக்கப்பட்டது.இதற்கிடையே அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களிலிருந்து ஏராளமான போட்டோக்களும், வீடியோக்களும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்டு வரும் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டுமல்லாமல் மேலும் பலர் சேர்ந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றி, மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்தது தெரிய வந்துள்ளது. தமிழக மக்களின் கொதி மனநிலையை அடுத்து தற்போது பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் சி.பி.ஐ. விசாரணைக்கான அரசாணையில் புகார் தந்த பெண் பெயரை குறிப்பிட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று உள்ளன. பாலியல் குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பெயரை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்ற ஏற்கனவே உத்தரவு வழங்கியிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறும் வகையில் அரசாணையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை காப்பாற்ற அரசு கபடநாடகத்தை தொடர்வதாக முகநூலில் ஸ்டாலில் புகார் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்