×

கோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி?

கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஆலோசனை

கோடை காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் 10வயது வரை உள்ள குழந்தைகளுக்கு  பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பமடைந்த பெண்களுக்கு பொதுவாகவே வாந்தி மயக்கம் இருக்கும். மழைக் காலங்களில் வாந்தி இருந்தாலும் உடலில் உள்ள நீர்ச்சத்தை கொண்டு தேகம் அதனை சமன்படுத்தி கொள்ளும். ஆனால் கோடை காலங்களில் வியர்வை மூலம் நீர்சத்து அதிகம் வெளியேறினால் சோர்வு ஏற்படுவதுடன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

எனவே அதற்கு ஈடு கொடு க்கும் வகையில் கோடை காலங்களில் நீர்சத்து அதிகம் உள்ள உணவுகளுக்கு கர்ப்பிணி பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்தாண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு கோடை காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதனை தீர்த்திடும் வழிமுறைகள் குறித்து மன்னார்குடி வட்டார அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மணவழகன் கூறுகையில்,
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு அதிகம் ஏற்படும். இதனால் கர்ப்பப்பையில் உள்ள நீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் சிறுநீர் தொற்று, தண்ணீர் சத்து குறைவதனால் சோர்வு போன்றவை அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கர்ப்பிணி தாய்மார்கள் வெயில் நேரத்தில் மிகவும்  சோர்ந்து படுவார்கள். இக்காலங்களில் அவர்களுக்கு அம்மை போன்ற தொற்று நோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தையின் வளர்ச்சியில்   பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தடுத்திடும் வழிமுறைகள் :

வெயில் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை நேரடியாகவோ அல்லது ஜூஸ் செய்தோ சாப்பிடுவது நல்லது. மேலும் கோடை காலங்களில் சிறுநீர் தொற்று, அம்மை போன்ற வியாதிகள் வராமல் இருப்பதற்கு தன் சுத்தம் தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்வது, கிருமி நாசினி போன்ற இயற்கையான மஞ்சளை தெளிப்பது, சாணம் தெளிப்பது, வேப்ப இலைகளையும் பயன்படுத்து வதால் போன்ற தொற்றுக்களை தடுக்க முடியும்.   

வீட்டில் உள்ள படுக்கை அறை, ஹால் போன்ற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு நல்ல காற்றோட்டமாக கவனத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் ஜன்னல் கதவுகளை திறந்து வைப்பதன் மூலம் வெளிக்காற்று உள்ளே வரவும் வெப்ப காற்று வெளியே செல்லவும் வழிவகுக்கும். மேலும் வீட்டின் உட்பகுதியில் வெப்பம் தாக்காமல் இருக்கும். கர்ப்பிணி பெண்கள் டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவ காரணமாக உள்ள கொசுக்களிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மாலை நேரங்களில் வீட்டின் கதவுகளை சாத்தி வைக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பிணித் தாய்மார்கள் தண்ணீர் பழச்சாறுகள் நீர் காய்கறி களை அதிகம் உண்பது நல்லது.

பிரசவம் ஆன தாய்மார்கள் கவனிக்க வேண்டியது :

பிரசவம் ஆன தாய்மார்களும் இந்த கோடை காலத்தில் வெப்பம் தாக்குவதை தவிர்க்க அதிக நீர் அருந்த வேண்டும். சத்து  அதிகம் உள்ள பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைக்கு நீர்ச்சத்து குறைபாட்டை தவிர்க்க முடியும். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும் கொடுத்த பிறகும் மார்பகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

அதன் பிறகு தாய்ப்பால் புகட்ட வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதத்திற்கு போதுமானது. வேறு எதுவும் சுடுதண்ணீர், சர்க்கரை தண்ணீர் இது போன்று எதுவும் கொடுக்க தேவையில்லை. முக்கியமாக கோடை காலங்களில் வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) வர அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே வெயில் நேரத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும் காற்றோட்டம் உள்ள பகுதியில் வசிப்பது நல்லது.

குழந்தைகளுக்கு:


பிறந்த குழந்தை முதல் ஒரு வயது வரை பச்சிளம் குழந்தைகள் வெயிலின் தாக்கத்தை தாங்குவது மிகவும் கடினம். ஆகவே குழந்தைகளை வெப்பம் அதிகம் உள்ள பகுதிகள் அதாவது ஆஸ்பெட்டாஸ் சீட், தகரக் கொட்டகை ஆகிய இடங்களில் குழந்தைகளை வைத்திருக்க கூடாது. கீற்றுக் கொட்டகை அல்லது கான்கிரீட் வீடுகளில் வெப்ப தாக்கம் அதிகமாக இருக்காது. வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள் இருக்கும் இடம் மிகுந்த  காற்றோட்டம் உள்ளதாகவும், ஜன்னல் கதவுகளை திறந்து வைப்பது நல்லது. குழந்தைக்கு நீர் பற்றாக்குறை வராமல் அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் அம்மை வயிற்றுப் போக்கு போன்ற வியாதிகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு இத்தொற்றுகள் வராமல் சுகாதாரமான அறைகளில் அல்லது வீடுகளில் குழந்தைகள் வளர்ப்பது நல்லது.

ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் வீடுகளில் சமைக்கும் இட்லி இடியாப்பம் நல்ல வேகவைத்த சாதத்தில் உருளைக்கிழங்கு நெய் போன்ற வற்றை விட்டு பிசைந்து கொடுப்பது நல்லது. ஆறு மாதத்திற்குப் மேலுள்ள குழந்தைகளுக்கு தண்ணீர், ஜூஸ் போன்ற பொருட்களை அதிகம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் தொற்று வராமல் சிறு, சிறு உபாதைகள் இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகி அதற்கு தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். அதை தவிர்த்து கை வைத்தியம் பார்ப்பது, பாட்டி வைத்தியம் பார்ப்பது போன்ற தவறான பழைய முறைகளை பின்பற்ற வேண்டாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pregnant mothers, breastfeeding mothers and babies born to the age of 10 may have various problems during the summer
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்