×

போலீஸ் சேனல்

ஏடிஎஸ்பி டார்ச்சரால் அலறும் காவலர்கள்
வேலூர் காவல் பயிற்சி பள்ளி ஏடிஎஸ்பி, தனக்கு கீழ் பணிபுரியும் ஆண், பெண் காவலர்கள் என பார்க்காமல் அனைவரையும் டார்ச்சர் செய்து வருகிறாராம். சமீபத்தில் அலுவலகத்திற்கு வந்த போது, அவர் அணிந்து வந்த செருப்பில், ஒன்றை மட்டும் நாய் ஒன்று கவ்வி சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அங்கு பணிபுரியும் காவலர்களை அழைத்து டோஸ் விட்டாராம். பின்னர் ஒரு செருப்பை காவலர்களின் கையில் கொடுத்து இதேபோல் மற்ெறாரு ஜோடி வாங்கி தருமாறு டார்ச்சர் செய்துள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் காவலர்களும் ஒவ்வொரு ஷோரூமாக அந்த ஒரு செருப்பை கையில் வைத்துக்கொண்டு தேடிப்பிடித்து அதேபோல் வாங்கி வந்து கொடுத்துள்ளனர். அவர் சொல்வதற்கு எதிர்கேள்வி கேட்டால் அவர்களை ஒருமையிலும், ஆபாசமாகவும் பேசி அவமானப்படுத்துகிறாராம்.

இவரின் அட்டகாசத்தால் வந்த ஒரு மாதத்திலேயே டிஎஸ்பி இடமாற்றம் வாங்கி கொண்டு ஓடிவிட்டாராம். டிஎஸ்பிக்கே இந்த நிலைமை என்றால், நாம் எல்லாம் என்ன செய்வது? என்று அங்கு பணிபுரியும் காவலர்கள் புலம்பி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் காவலர் இங்கு மாற்றுப்பணிக்காக வந்துள்ளார். இரவு, பகல் என டூட்டி போட்டுள்ளார். இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் காவலர் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மற்ற காவலர்கள் அந்த பெண் காவலரை மீட்டு சமாதானம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த காவலர்களும் இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று காத்திருக்கின்றனர்.

போலீசை கொல்ல முயற்சி சிக்கியவருக்கு போலீஸ் பணி
குமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய போலீஸ்காரர் ஒருவரை வழி மறித்து தாக்கிய வழக்கில் 2 பேர் மீது, வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் கடந்த 2011ல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவர் முன்னாள் ராணுவ வீரர். பின்னர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர், தமிழக காவல்துறையில் பணிக்கு விண்ணப்பித்தார். கொலை முயற்சி வழக்கு இருப்பதால், இவர் காவல்துறையில் பணியில் சேர முடியாது. ஆனால் காவல்துறையில் உள்ள சிலரின் உதவியுடன், தன் மீது வழக்கு இருப்பதை மறைத்து காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். தற்போது வெளி மாவட்டத்தில் காவல் துறையில் உள்ளார்.

இந்த விவகாரம் இப்போது குமரி மாவட்டத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. போலீசாரை தாக்கி, கொலை முயற்சி வழக்கில் சிக்கியவருக்கு, வழக்கு நிலுவையில் இருக்கும் போது காவல்துறை பணி எப்படி வழங்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கு இருப்பது எப்படி மறைக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக எஸ்.பி. உரிய விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் போலீசாரை தாக்க மற்றவர்கள் அச்சப்படுவார்கள். இல்லையென்றால் பலர் இனி தைரியமாக போலீசாரை அடிக்க பாய்வார்கள் என்று காவல்துறையில் உள்ள சிலர் மனக்குமுறலுடன் கூறுகிறார்கள்.

உதார் சூப்பிரண்ட் ஏப்பம் விட்ட 2 லட்சம்  டிஐஜி விட்ட டோஸால் பாதி பணம் செட்டில்டு
வேலை எதுவென்று முக்கியமில்லை. ஏமாந்தவர்கள் கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் கல்லா கட்டலாம் என்று நிரூபித்திருக்கிறாராம் மாங்கனி மாவட்டத்தில் ஒரு கிளைச்சிறை சூப்பிரண்ட். சேலம் பெண்கள் கிளை சூப்பிரண்டாக இருந்தபோது அறிவும், அழகும் பெயரில் வைத்திருக்கும் அந்த சூப்பிரண்ட், மேல்மட்டத்தில் தனக்கு பெரும் ெசல்வாக்கு இருப்பதாக வாயிலேயே வடை சுட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பிய பெண் சமையலர் ஒருவர், தனது  மகளுக்கு விஏஓ வேலை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். ‘‘இது என்ன பிரமாதம், கையில 2லட்சத்தை ெவட்டு. அடுத்தவாரமே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் ரெடி’’ என்று உதார் விட்டுள்ளார். இதற்கிடையே உதார் சூப்பிரண்ட் ஆத்தூர் கிளைச்சிறைக்கு மாற்றமானார்.

ெபாறுமையிழந்த சமையல் பெண், சிறைத்துறை சரக டிஐஜியிடம் கதறி அழுது, உதார் சூப்பிரண்டின் சுயரூபத்தை போட்டுடைத்தார். சரக டிஐஜி விட்ட டோசில் முதற்கட்டமாக 1.35 லட்சம் சமையல் பெண்மணியின் கைக்கு வந்தது. மீதியுள்ள 65ஆயிரம் இதுவரை கைக்கு வரவில்லையாம். சமையல் பெண்மணி சமீபத்தில் சூப்பிரண்டை ேநரில் பார்த்து மீதி பணத்தை தரும்படி கண்ணீர் விட்டாராம். எப்படி இருந்தாலும் அந்த பணத்தை நான்தான் கொடுக்கணும். டிஐஜி கேட்டா, குடுத்துட்டேன்னு சொல்லு. அப்படி நீ சொல்லிட்டா, உடனடியா பணத்தை செட்டில் பண்ணுகிறேன் என்று எகத்தாளமாக கூறியிருக்கிறார் சூப்பிரண்ட். மீண்டும் டிஐஜியை சந்திக்க ஆயத்தமாகிறாராம் சமையல் பெண்மணி.

கலெக்‌ஷனில் நம்பர் ஒன் நாங்கதான்...!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சப்-டிவிசனில், காங்கயம், வெள்ளக்கோவில், ஊதியூர், ஊத்துக்குளி உள்ளிட்ட பல பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை படு ஜோராக நடக்கிறது. இதை கண்டுகொள்ளாமல் இருக்க, காவல்துறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை 2 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மாதம்தோறும் மாமூல் வெட்டப்படுகிறது. டாஸ்மாக் ‘’பார்’’ தில்லுமுல்லு விவகாரத்தில் ₹2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ‘கவனி’க்கப்படுகிறது. மணல் லாரி, கிராவல் லாரிக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. சீட்டாட்டம் கிளப்பில் மாதம்தோறும் 50 ஆயிரம் பெறப்படுகிறது.

இப்படி பணம் குவிப்பதில் காங்கயம் சப்-டிவிசன் போலீசார் நம்பர் ஒன் இடத்தில் உள்ளனர். தனக்கு கீழ்நிலையில் உள்ள டிஎஸ்பி மற்றும் அவருக்கு கீழ்நிலையில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரின் நடத்தை எப்படி உள்ளது? என்பதை கண்காணிக்க, மாவட்ட கண்காணிப்பாளருக்கு நேரமில்லை. அதனால், காவல்துறை காட்டில் ஒரே பண மழை பொழிகிறது.

கடத்தல்காரர்களோடு கைகோர்க்கும் போலீஸ்
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை அதிகளவு இலங்கைக்கு கடத்தி செல்கின்றனர். அதிகளவு படகுகளில் சட்டவிரோதமாக இங்கு கடத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது. கடத்தல் சம்பவம் அறிந்து போலீஸ் அங்கு சேர்வதற்குள், கடத்தல்காரர்களுக்கு விபரம் தெரிந்து அவர்கள் தப்பித்துச் சென்றுவிடுதாக போலீஸ் அதிகாரிகள் புலம்புன்றனர். சமீபத்தில் இலங்கையை சேர்ந்த 2 வாலிபர்கள் உள்பட 4 பேரை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில், சட்டவிரோதமாக  இவர்கள் இலங்கையிருந்து படகில் வந்ததும், ராமநாதபுரம் மாவட்டம், வேதாளையை  சேர்ந்த ‘கடத்தல் கிங்’ ஒருவர் இவர்களுக்கு  உதவி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மிகவும் ரகசியமான முறையில் இரவோடு இரவாக  அந்த முக்கியப் புள்ளியை போலீசார் தேடிச் சென்றிருக்கின்றனர்.

ஆனால், அவர் இலங்கைக்கு தப்பி சென்று விட்டாராம். இடைப்பட்ட நேரத்திற்குள் அவருக்கு தகவல் தெரிவித்தது, ஒரு போலீஸ்காரர்தான் எனத் தெரிய வந்திருக்கிறதாம். அந்த போலீஸ்காரர் யார் என்பதை உயர் போலீஸ் அதிகாரிகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம். காவல்துறையில் சில பிரிவு போலீசார் கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இதனால் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக நேர்மையான அதிகாரிகள் புலம்பித் தவிக்கிறார்களாம்.

படி கிடைக்கலையே... காக்கிகள் புலம்பல்
அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபிக்கள் வந்தால் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது வழக்கம். பிரதமர், முதல்வர் போன்ற தலைவர்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதற்காக போலீசாருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.170 வரை பயணப்படி வழங்குவது வழக்கம். சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி மதுரை வந்தார். இதுபோல் கடந்த 1ம்தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற அரசு விழா நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசாருக்கு இதுவரை பயணப்படி வழங்கவில்லை. இது போலீசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வெயில், மழை என்று பாராமல் கடுமையாக வேலை பார்த்தும் அதற்குரிய ஊதியம் கிடைக்கலையே என்பது போலீசாரின் புலம்பல். இந்த புலம்பல் யாருக்கு கேட்கிறதோ இல்லையோ, டிஜிபிக்கு கேட்டால் போதும் என்கின்றனர் பாதுகாப்பு போலீசார்.

ஓசி சரக்கு... வறுத்த கறி... சூப்பர்
ஈரோடு மாவட்டத்தில் 180க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளை ஒட்டியிருக்கும் ‘பார்’ களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடக்கிறது. இந்த அத்துமீறலை கண்டுகொள்ளாமல் இருக்க, உள்ளூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் என எல்லா தரப்பினரையும் ‘பார்’ உரிமையாளர்கள் ‘கவனி’த்து விடுகின்றனர். ஆனாலும், கணக்கு காட்ட வேண்டுமே... எனக்கூறி மதுவிலக்கு ேபாலீசார் அவ்வப்போது ரெய்டு என்ற பெயரில் ‘பார்’களுக்குள் புகுந்து விடுகின்றனர். கையில் கிடைக்கிற மது பாட்டில்களை அள்ளிச்சென்றுவிடுகின்றனர்.

போகிற வழியில், இந்த மது பாட்டில்களை, ‘பிளாக்’கில் விற்று காசு பார்த்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி, அன்றையதினம் இரவு பணி முடித்து வீடு திரும்பும்போது, சம்பந்தப்பட்ட ‘’பார்’’களுக்கு சென்று ஓசி சரக்கு... வறுத்த கறி... என பக்காவாக எல்லாவற்றையும் ருசி பார்த்துவிட்டு செல்கின்றனர். இவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது... இப்படியே போனா, வருகிற வருமானம் முழுவதையும் இவர்களுக்கு கொடுத்துவிட்டு நாம பேசாம போயிட வேண்டியதுதான்... என ‘பார்’ உரிமையாளர்கள் நொந்துகொள்கின்றனர்.

கூண்டோடு மாத்திடுங்க... மக்கள் கோரிக்கை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 121 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் போலீசாரின் உதவியோடு அதிக அளவில் கள்ள சாராயம் விற்பனையும், மணல் கடத்தலும் கொடி கட்டி பறக்கிறது. மாவட்ட எஸ்.பி. நெருக்கடி கொடுத்தால் அவ்வப்போது சாராய வியாபாரிகளிடம் தூது அனுப்பி மாதத்திற்கு 5 முதல் 10 பேர் மீது பெயருக்கு வழக்கு பதிந்து கைது செய்யப்படுவார்கள். இந்நிலையில் நாகை எஸ்.பி. விஜயகுமார் அதிரடியாக கீழ்வேளூர் காவல் நிலைய பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளை கைது செய்ய அந்த சரக போலீசாருக்கு தெரியாமல் 5 இன்ஸ்பெக்டர்கள் என 30 போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து 2 நாளில் 52 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆனாலும் தகவல் அறிந்து முக்கிய சாராய வியாபாரிகளை கீழ்வேளூர் போலீசாரே தப்ப வைத்துள்ளனர். கீழ்வேளூர் சரக போலீசார் அடாவடியாக வசூல் செய்வதில் கில்லாடிகள். திருட்டு நடந்த வீட்டின் உரிமையாளர்களை மிரட்டி குறைவான பொருட்கள் திருடு போனதாக எழுதி வாங்கி அதனை முறையாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டுவிடுகின்றனர். மணல், சாராயம் போன்ற சமூக விரோத செயலுக்கு மட்டும் பச்சை கொடி காட்டி வசூலில் கொடி கட்டி பறக்கின்றனர். இதில் தற்போது நாடாளுமன்ற தேர்தைல கருத்தில் கொண்டு சில காவலர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளனர். கீழ்வேளூர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரையும் கூண்டோடு மாற்றணும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாம்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police channel
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்