×

நான் ஏன் ஓடுகிறேன்!

நன்றி குங்குமம் தோழி

மகளிர் தின ஸ்பெஷல்


வாழ்க்கை நம்மைக் கடுமையான சிக்கலுக்குள் தள்ளும் போதுதான் நாம் இன்னும் பலமடைகிறோம். அவை யாவும் நம் வாழ்வை இன்னும் உறுதியாக்கும் என்று நிரூபித்திருக்கிறார் பூனாவை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை பூனம் சொனுனே. இந்திய விளையாட்டு துறையில் நிறைய மறைக்கப்பட்ட கதைகள் உள்ளன. விளம்பரத்திற்குத் தேவையான பிரபலங்களை உள்ளடக்கிய விளையாட்டுகள் மட்டுமே அனைவரும் பேசு பொருளாக வைத்திருக்கிறது இங்கு. விளையாட்டு  துறையில்  பலர் தங்கள் கனவுகளை அடைவது மிகவும் கடினம். அதிலும் வறுமையில் இருப்போருக்குக் கூடுதல் சவாலே.

சமூகத்தில், நிதி ரீதியாக நிலையான குடும்பத்தில் பிறக்காதவர்களுக்கு இந்த உலகம் கொடுமையானது.  அவர்கள் விரும்பும் அல்லது தேவையான அனைத்தை யும் நிறைவேற்றுவது சிரமமானதும்கூட. குடும்பத்தாருக்கு உணவு வழங்க, கௌரவமான வாழ்வு வாழ என, ஒரு சராசரி இந்திய குடும்பத்தில் நிறையபேர் தொலைந்து போயிருக்கிறார்கள். இன்னும் சிலர் அதில் அதிகமானவற்றை சாதிக்க விரும்புகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தின் சக்வான் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயிக்கு இரண்டு மகள்கள். ஒரு குறிப்பிட்ட வயதில் அக்காவின் திருமணம் பற்றிப் பேசப்படுகிறது. திருமணம் பற்றிய கனவுகள் அவளுக்கும், மகளின் திருமணம் பற்றிய ஆசைகள் பெற்றோருக்கும் இருக்க, அதை அறிந்திருக்குமா என்ன வறுமை.

இந்த வறுமையை வென்று எப்படி தன்னை சார்ந்திருப்பவர்களின் ஆசையையும், கனவையும் நிறைவேற்றுவது என்று யோசிக்கிறாள் 19 வயதான தங்கை பூனம் சொனுனே. திருமணத்தை கௌரவமான முறையில் நடத்திடவும் முடிவு செய்கிறாள். அக்காவின் திருமண செலவிற்கு நாம்தான் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து மாரத்தான் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க ஆரம்பிக்கிறாள். சிறுவயதிலிருந்தே ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் கொண்ட பூனம், பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளும் பெற்றிருக் கிறாள். கடந்தாண்டு நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் 3000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றதே இதற்கு சாட்சி. பூனத்தின் திறமையை அறிந்து அவளது பள்ளி விஜேந்திர சிங் என்ற பயிற்சியாளரிடம் அனுப்பி வைக்கிறது. வறுமையின் பிடியிலிருக்கும் பூனம் நிலையை உணர்ந்து அவரது பயிற்சியாளர், தொண்டு நிறுவனங்கள் மூலம் அவளுக்கான பயிற்சி செலவுகள் அனைத்தும் செய்து கொடுத்தார்.
 
எண்ணற்ற நேரங்கள் பயிற்சி மேற் கொண்ட பூனம், குடும்பத்தின் வறுமை, வெற்றி பெற வேண்டுமென்ற வெறி  ஆகிய மொத்தத்தின் பலனாக பூனேவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். அதில் வெற்றியும் பெற்றார். முதல் பரிசாக அவருக்கு ரூ.1.25 லட்சம் கிடைத்தது. அதை தன் அக்காவின் திருமணத்திற்காக தந்தையின் கையில் ஒப்படைத்தார்.  இப்போது பூனத்தின் உதவியால் அவரது அக்காவின் திருமண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், பூனமோ தெற்காசிய போட்டிகளில் வீரர்களுக்கான தேர்வுகளில் பங்கேற்றதால் தன் அக்காவின் திருமணத்தில் பங்கு பெற முடியுமா என்ற சூழல். ஆனாலும், பூனத்துக்கும், அவரது சகோதரிக்கும் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வெற்றி பெறவேண்டும் என்ற  ஆசையோடு களத்தில் நிற்பதும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் நிற்பதும் வெவ்வேறானது. பூனம் வெறி யோடு நின்றவர். சாதிக்க வறுமை ஒரு காரணமில்லை என்பதை நிரூபித்த பலரில் பூனமும் இடம்பெற்றிருக்கிறார்.

-அன்னம் அரசு


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Life, marriage, desires, dreams
× RELATED வேலூர் மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ்...