×

எஞ்சியிருக்கும் கடைசி தேவதாசி

நன்றி குங்குமம் தோழி

மகளிர் தின ஸ்பெஷல்


முத்துக் கண்ணம்மாள் 82 வயதைக் கடந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் கடைசி தேவதாசிப் பெண். அங்கிருக்கும் விராலிமலை முருகன் கோயிலுக்கு பொட்டுக் கட்டப்பட்டவர். விராலிமலை முருகனின் மனைவியாக  அழைக்கப்பட்டவர். விராலிமலைக் குறவஞ்சியையும், சதிராட்டத்தையும் அறிந்த எஞ்சியிருக்கும் கடைசி தேவதாசிப் பெண் இவர் மட்டுமே. அவரை “God’s last wife” எனும் தலைப்பில் ஆவணப்படுத்தி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜெயக்குமார். இந்த ஆவணப்படம் கேரளாவில் நிகழ்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. ஆவணப்படுத்தியது  குறித்து அவரிடம் பேசியபோது…

‘‘நமது வரலாற்றுத் தொன்மங்களில் பல ஆச்சரியங்கள் உண்டு. அதில் ஒன்று தேவதாசி முறை. அதாவது தேவதாசி மரபில் வந்த பெண்களை பொட்டுக் கட்டி, கடவுளை கணவனாக்கி, கடவுளுக்கே அவர்களின் வாழ்க்கை என்றாக்கப்பட்டவர்கள். பொட்டுக்கட்டிய அந்த கணத்தில் இருந்து கோவிலிலும், அரண்மனையிலும் கடவுளைப் பற்றிய பாடல்களை பாடியும் ஆடியும் காண்போரை மகிழ்விப்பதே இவர்களின் வேலை. இந்தப் பெண்களுக்கு திருமணம் செய்துகொள்ள உரிமை இல்லை. இவர்களின் திருமணம் முறையாக இல்லாமல், பரஸ்பரம் புரிதல் உள்ள ஆணோடு சேர்ந்திருக்க சமூகம் அனுமதித்திருக்கிறது. விரும்பிய நபரோடு இவர்களுக்கு குழந்தைகளும் உண்டு. ஆனால் அவர்களை கணவர் எனச் சொல்லமாட்டார்கள். இவர்களை ஒரு கோயிலில் இருந்து வேறொரு கோயிலுக்கு விலை கொடுத்து வாங்கும் பழக்கமும் இருந்திருக்கிறது.

முத்துக் கண்ணம்மாள். புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்த 32 தேவரடியாள்களில் கடைசியாக இருப்பவர். தன்னுடைய 7 வயதில் பொட்டுக் கட்டப்பட்டு, விராலிமலை முருகன் கோயிலில் தேவதாசியாக ஆக்கப்பட்டவர். அதில் இருந்து புதுக்கோட்டை சமஸ்தான அரண்மனை, விராலிமலை முருகன் கோயில் இவற்றில் விராலிமலை குறவஞ்சியை பாடி ஆடி நடித்தவர். சதிராட்டம் ஆடுவதிலும் இவர் ரொம்பவே திறமைசாலி. அவரின் ஏழு வயதில் தொடங்கிய பயணம் இது. முத்துக் கண்ணம்மாளின் கால் ஆடுவதையும் வாய் பாடுவதையும் நிறுத்தவே முடியாது. விராலிமலை குறவஞ்சியை அறிந்த ஒரே நபர் என்கிற அடைமொழியோடு மிச்சமிருக்கும் நாட்களை கழிக்கிறார். விராலிமலை முருகன்தான் எங்கள் 32 தேவரடியார்களுக்கும் முதல் கணவன். அவரை நினைத்து பாடவும் ஆடவுமே நாங்கள் பிறந்திருக்கிறோம் என்கிறார் புன்னகை மாறாமல் அந்த ஆவணப்படத்தில்.

பொட்டுக் கட்டுதல் என்பது இவர்களுக்கு திருமணம் மாதிரி. கோயிலுக்கு பொட்டுக் கட்டுவதால் இவர்கள் கடவுளின் மனைவியாகிறார்கள். கோயிலில் இருக்கும் மூலவர்தான் இவர்களின் கணவர். முக்கியமான அதிகாரிகள் வருகிறார்கள் என்றால் மகாராஜாவின் அழைப்பில், அரண்மனை மண்டபத்திற்கு சென்று அவர்களை மகிழ்விக்க ஆடி பாடி சதிராடுவார்கள். அங்கே மகாராஜா, கலெக்டர், தாசில்தார், மணியார், கணக்குபிள்ளை எல்லாம் கூடி தர்பார் மண்டபத்தில் அமர்ந்து இருப்பார்கள். எங்களில் இருவர் மிருதங்கம், இருவர் நட்டுவாங்கம், இருவர் சுதிபெட்டி, இருவர் புல்லாங்குழல் என பிரித்துக் கொள்வோம். ஆடி பாடி முடித்ததும் வெள்ளி நாணயங்களை ஒரு கைபிடி எடுத்து எதிரில் இருக்கும் தாம்பாளத்தில் வைத்து ராஜா எங்களிடத்தில் கொடுப்பார் என்கிறார் இவர்.

பெண்கள் இப்போது அலங்காரம் செய்துகொள்வது மாதிரி எல்லாம் அன்று பெரிதாக ஒன்றும் ஒப்பனைகள் இருக்காது. பயத்தம் பருப்போடு மஞ்சள் மற்றும் ரோஜா இதழ்களை சேர்த்து மூன்றையும் இடித்து பொடியாக்கி அதைத்தான் உடலில் பூசிக் குளிப்போம். பவுடர் போன்ற அழகு சாதனப் பொருட்கள் இல்லாத காலம் அது. பொட்டு மட்டுமே நெற்றியில் வைப்போம். தலைக்கு ராக்கொடி, சுட்டி போன்றவைகளை வைத்து நீளமாக ஜடை பின்னி தலை அலங்காரம் செய்து கொள்வோம் என்கிறார் பழைய நினைவுகளில் மூழ்கி. தான் அடிமையாக்கப்பட்டிருக்கிறோம் என்கிற புரிதலை கொஞ்சமும் உணராத வெகுளித்தனம் அவரிடத் தில் நிறைந்திருக்கிறது.கோவிலில் பொட்டுக்கட்டப்பட்ட 32 பெண்களுமே காலை,  மாலை என இரண்டு வேளையும் முருகன் கோவிலுக்குச் செல்வோம். பிறகு சாமி ஊர்வலம், கடவுள் எழுந்தருளல், பள்ளியறை, தீபாராதனை என எல்லாவற்றுக்கும் ஆடல் பாடல் இருக்கும். இதற்கு ஆறு அனா சம்பளம் எங்களுக்கு வழங்கப்படும்.

மண்டபத்தில் சதிர் ஆடும்போது 1  ரூபாயை வெற்றிலை பாக்கில் வைத் துக் கொடுப்பார்கள். இதுபோக சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களிலும் கோவில்களில் நாங்கள் ஆடி பாடுவோம் என்கிறார் புன்னகையோடு அபிநயம் செய்து காட்டியபடி. இந்தக் கலைகள் தன்னோடு அழிந்துபோகக் கூடாது என்பதற்காக நாட்டியக் கலைஞர்களை அழைத்து, விராலிமலைக் குறவஞ்சியை பாடியபடி, பயிற்சியும் வழங்குகிறார் முத்துக் கண்ணம்மாள்.தமிழ்நாட்டில் உள்ள பல சமஸ்தானங்கள், கோவில்களில் தேவரடியார்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தஞ்சாவூர் பெரிய கோவிலில் 400 தேவரடியார்கள் இருந்ததாக வரலாற்று தரவுகள் உள்ளன.தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளிலும் அதற்கான சான்றுகள் உள்ளது. இவர்களுக்கென தனி காலனி கட்டித் தரப்பட்டு அந்த காலனி வீடுகளுக்கு எண்களும் வழங்கப்பட்டிருக்கிறது.

கதை, இலக்கியம், நாவல்களில், தேவரடியார் களைப் பற்றி நிறைய தரவுகள் இருக்கின்றன. கோவில்களில் இருக்கும் அரசு வேலை மாதிரி இதற்கென தனி பிரிவே இருந்திருக்கிறது. தேவதாசி முறை 1947ல் அரசால் தடை செய்யப்பட்டது. தேவதாசிமுறை ஒழிக்கப்பட்ட பிறகு, இந்தப் பெண்கள் மன்னர் காலத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்ட நிலங்களைக்கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தியுள்ளனர். நம் தமிழ் சமூகம் ஒரு பெரும் பெண் கூட்டத்தையே அடிமையாக்கி கடவுளின் பெயரைச் சொல்லி சீரழித்திருக்கிறது. தேவதாசி கடவுளின் மனைவி என்றால், முத்துக் கண்ணம்மாவோடு கடவுளின் கடைசி மனைவி பதவி முடியட்டும். இனிமேல் ஒரு மனைவி இந்தக் கடவுளுக்கு வாய்க்காதிருக்கட்டும்’’ என்கிற கனமான வார்த்தைகளோடு நிறைவு செய்தார் ஜெயக்குமார்.

-மகேஸ்வரி
படங்கள் : ஜெயக்குமார்


தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்


தேவதாசி முறை ஒரு குலம் சார்ந்த ஒன்றாக இருந்திருக்கிறது. 1930க்கு முன்பு பக்தி இலக்கியம் ஆதிக்கம் செலுத்திய ஆறாம் நூற்றாண்டில் இவர்கள் சமூகத்தினரால் மரியாதையாகப் பார்க்கப்பட்டனர். தமிழகத்தில் உள்ள தேவதாசிகள் நாட்டியத்திலும்,  இசையிலும் மட்டும் கைதேர்ந்தவர்களாக இருக்க வில்லை... சிறந்த மொழி அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.  பின்னர் கோயில்களை நிர்வகித்த அரசர், செல்வந்தர், நிலக்கிழார் உள்ளிட்ட மேல் வர்க்கத்தினர் முன்பு நடனமாட வைக்கப்பட்டதோடு, அவர்களது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தந்தை பெரியாரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினராய் இருந்த டாக்டர் முத்துலட்சுமி, தனது சட்டமன்ற உரையில் தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்து பேசினார். அதற்கு “தேவதாசிகள் புனிதமானவர்கள். அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள். அவர்கள் அடுத்த பிறப்பில் சொர்க்கத்தில் பிறப்பார்கள்” என்று சத்தியமூர்த்தி பேசினார். அதற்கு பதிலளித்த முத்துலட்சுமி, “தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வதாக இருந்தால் இனிமேல் சத்தியமூர்த்தி அவர்கள் தங்களது வீட்டுப்பெண்களைத் தேவதாசிகளாக்கி அவர்கள் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறக்க செய்யலாமே” என்று பதிலடி கொடுத்தார்.பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘பொட்டுக்கட்டும்’ வழக்கம் 1947ம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

ஜெயக்குமார், கோவை புகைப்படக் கலைஞர்

‘‘அடிப்படையில் நான் ஒரு புகைப்படக் கலைஞர். கல்வெட்டியல் துறையில் (epigraphy) பி.எச்.டி. முடித்துள்ளேன். வரலாற்று ரீதியான நிகழ்வு ஒன்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே என் நீண்டநாள் கனவு. இது என்னுடைய முதல் ஆவணப்படம். கேரளாவில் நிகழ்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய ஆவணப் படமும் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து மூன்று தமிழ் படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. அதில் ஒன்று மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம். மற்றொன்று பரியேறும் பெருமாள். மூன்றாவதாக “God’s last wife” என்கிற என்னுடைய ஆவணப்படமும் இடம் பெற்றது.சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தமே மூன்று ஆவணப்படங்கள் மட்டுமே திரையிடத் தேர்வானது. அதில் ஒன்று என்னுடையது. மற்ற இரண்டும் கேரளா மாநிலத்தின் ஆவணப்படங்கள்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Devadasi, Muthu Kannammal, Documentary, Maharaja, Collector, Tashildar,
× RELATED தெற்கு ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில்...