70 ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்சினை... இந்தியா - பாகிஸ்தான் முதல் போர்...

1947-ம் ஆண்டில்  அகண்ட பாரதம் இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளாக அறிவித்தார் மவுண்ட் பேட்டன். அதன்படி 1947-ம் ஆண்டு 14-ம் தேதி பாகிஸ்தான் எனும் தேசம் உருவானது. பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக மவுண்ட் பேட்டனாக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக முகமது அலி ஜின்னா பதவியேற்றுக் கொண்டார். சுமார் 72 லட்சம் இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர் என்று அந்நாடு தெரிவித்தது. இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் வேண்டும் என்று நினைத்த ஜின்னா, தான் கட்டமைத்த தேசத்தை மதசார்பற்ற தேசமான இருக்க வேண்டும் எனவும் கனவு கண்டார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் எல்லை பங்கீட்டில் வெள்ளை ஏகாதிபத்தியம் அறிவித்த அறிவிப்பு தான் இன்று வரை காஷ்மீர் பிரச்சினைக்கு அடிப்படையாகி உள்ளது. அதன்படி இந்துக்கள் அதிகம் உள்ள பகுதி இந்தியாவுடனும், இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகள் பாகிஸ்தானுடனும் இணைந்தன. அதே வேளையில் தாங்கள் விரும்பினால் சமஸ்தானங்கள் தனி நாடாக அறிவிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஐதரபாத் உள்ளிட்ட பல்வேறு சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்த படேல், காஷ்மீரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். மறுபுறம் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க முகமது அலி ஜின்னா முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் காஷ்மீர் தனிநாடாக பிரகடனபடுத்தப்பட்டது. ஆனால் தங்களுடைய நாட்டின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று துடித்தது பாகிஸ்தான். இதனையடுத்து காஷ்மீரை இணைக்க ஆபரேஷன் குல்மார்க் என்ற திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது பாகிஸ்தான். ராணுவம் அல்லாத குழுக்களை ஊடுருவ செய்து அதன் மூலம் காஷ்மீரை தங்கள் வசப்படுத்தி கொள்ளலாம் என்று நினைத்தனர்.

அதன்படி பதான் என்னும் அமைப்பினரை கொண்டு யூரி, டோனல், பாரமுல்லா இறுதியில் ஸ்ரீநகரை கைப்பற்றுவதன் பாகிஸ்தானின் பிளான். 1947-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி அன்று இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியர்கள் மிக கோர தாக்குதலை முன்னெடுத்தனர். இதற்கு பதிலடி கொடுக்க காஷ்மீர் மன்னர் ஹரிசியின் ராணுவம் திணறியது. டோனல், யூரி உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய பாகிஸ்தான் நடவடிக்கைகளை இந்தியா அமைதியாகவும், உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவின் உதவியை நாடினார் காஷ்மீர் மன்னர் ஹரிஷி. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த இந்தியா, காஷ்மீரை இந்தியாவின் அங்கமான இணைத்தால் உரிமையோடு போர் புரியலாம் என்று எண்ணியது இந்தியா.

அப்போது காஷ்மீர் மன்னருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்பதே. காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் எங்கள் தேசத்திற்காக உரிமையோடு போர் புரிவோம் என்று இந்தியா தெரிவித்தது. நீண்ட நெடிய பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைக்கு பின்னர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது காஷ்மீர். இந்த கால கட்டத்தில் காஷ்மீரின் பெரும்பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியது. ஸ்ரீநகரை நெருங்கிய போது இந்திய ராணுவம் களமிறங்கியது. பாகிஸ்தானின் பதான்கள் இந்திய ராணுவத்தினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை.

இதனையடுத்து போருக்கு உத்தரவிட்டார் முகமது அலி ஜின்னா. பதான்களுடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த நேரத்தில் தான் இந்தியா - பாகிஸ்தான் போராக மாறியது. கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறிய இந்திய ராணுவம் ஜாங்கர் பகுதியை கைப்பற்றியது. இந்திய ராணுவத்தினருக்கு பதிலடி கொடுக்க முடியாமல் தினறியது பாகிஸ்தான் ராணுவம். பதான்கள் கைப்பற்றிய அனைத்து பகுதியையும் இந்திய ராணுவம் தங்கள் வசம் கொண்டு வந்தது. பாகிஸ்தான் சில பகுதிகளை கைப்பற்றுவதும், அதனை இந்தியா மீட்பதும் காஷ்மீரில் நீடித்து வந்த இந்த போர் பிரதமர் நேருவுக்கு வருத்தத்தை அளித்தது.

காஷ்மீர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அணுகினார். காஷ்மீரின் அனைத்து பகுதிகளையும் பாகிஸ்தான் நாசம் செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட காஷ்மீரை காக்கவும் பாகிஸ்தான் வீரர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது இந்தியா. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. விசாரணை மேற்கொண்டது. விசாரணை முடிவில் காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் ஆதரவு படைகள் வெளியேற உத்தரவிட்டது. இதன் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இறுதியா 1949-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து எந்த படை எங்கு உள்ளதோ அதனடிப்படையில் எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி காஷ்மீரில் 5-ல் 2 பகுதி பாகிஸ்தானுக்கும், 3 பங்கு இந்தியாவுக்கும் வந்தது. அன்று முதல் பாகிஸ்தான் வசமுள்ள பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், என இந்தியாவும், அதே போல் இந்தியா வசமுள்ள பகுதியை இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பாகிஸ்தானின் நிலைப்பாடு. ஐ.நா. தலையிட்ட பின்னரும் பாகிஸ்தானின் தலையீடு கொஞ்சமும் குறையவில்லை. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: