தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் அட்டை சரிபார்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் நடத்துமாறு மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்குள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போனவர்களை சேர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்கள் பயன்பாட்டிற்காக பிரத்யேக வசதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த வகையில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தாங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடி உள்ளிட்ட விபரங்களை பெறமுடியும். இந்த இலவச எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியும் வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை தகவல்களாக பெறலாம். இதுபோல, என்.வி.எஸ்.பி. என்ற செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம், அங்கு பணியாற்றும் அதிகாரிகள் விவரம் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: